சென்னையின் 25 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் விஜய்மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழைக்கால தொற்று நோய்கள் பரவும் அபாயத்தால் காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சென்னையின் 25 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் விஜய்மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவ முகாம்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள், நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் உள்ளன. பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என பாரபட்சமின்றி இதில் கலந்து கொண்டு மருத்துவர்களிடம் உரிய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டப்போது நடிகர் விஜய் கரம் கொடுத்து துயர் துடைப்போம் என ரசிகர்களுக்கு பதிவிட்டிருந்தார். இதனையடுத்து மழையின் போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இவர்களது செயல்களால் மக்களிடம் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்தன. அதேபோல் இன்று நடைபெறும் மருத்துவ முகாம் சென்னை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.