உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்க்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது.
இதில் அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 2 விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக லகிம்பூர் கேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பல இடங்களில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.அரசியல் கட்சி தலைவர்கள் யாரையும் இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதியதின் வீடியோ வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், நெஞ்சை பதை பதைக்கும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சாலையில் நிற்கும் விவசாயிகள் பின்புறம் வழியாக வேகமாக வரும் கார் அவர்கள் மீது ஏற்றிவிட்டு நிறுத்தாமல் செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன. இந்த வீடியோவை டுவிட்டரில் பலரும் பகிர்ந்துவருகின்றனர். அந்த வீடியோ பார்ப்பவர்களைப் பதறச் செய்யும் வகையில் உள்ளது.