• Tue. Apr 30th, 2024

மருதன்கிணறு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

ByM.maniraj

Oct 13, 2023

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலூக்காவிலுள்ள மருதன்கிணறு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இக்கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, நெல் பூ மற்றும் பாசிப்பயிறு போன்றவைகளை விவசாயம் செய்து வருகின்றனர். மழையை நம்பியே விவசாயம் செய்வதால் கால்நடைகளையும் அதிகமாக வளர்த்து வருகின்றனர். குறிப்பாக கறவை மாடு, வெள்ளாடு, செம்மரி ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றனர். காலநிலைக்கேற்ப கால்நடைகளை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. மழை காலங்களிலும் கோடை காலங்களிலும் பல்வேறு நோய்கள் கால்நடைகளை தாக்குகிறது. இதுவே கால்நடை விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. தென்காசி மாவட்டத்தில் பருவமழை ஆரம்பித்து உள்ளதால் நோய்களிருந்து கால்நடைகளை பாதுகாக்க கால்நடை முகாம் நடத்தப்பட்டது. மருதன்கிணறு பஞ்சாயத்து தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். மேலநீலித நல்லூர் உதவி கால்நடை மருத்துவர் இளமதி மற்றும் மகேந்திரவாடி கால்நடை ஆய்வாளர் பேச்சியம்மாள் ஆகியோர் கால்நடைகளுக்கு சினை ஊசி போடுதல், குடற்புழு நீக்க மருந்து கொடுத்தல், மடிவீக்க நோய்க்கு சிகிச்சை அளித்தல், காயங்களுக்கு சிகிச்சை அளித்தல் மேலும் சினை பரிசோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் 50 கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு 300 க்கும் அதிகமான கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *