• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தண்ணீரில் மிதக்கும் வேலூர் கோட்டை கோயில்..பக்தர்கள் வேதனை

Byகாயத்ரி

Dec 1, 2021

தொடர் மழையின் காரணமாக வேலூர் கோட்டை அகழி நிரம்பி அதன் உபரிநீர் கோட்டையின் உள்கட்டுமானங்களின் வழியாக கோயில் வளாகத்தில் கடந்த 20 நாட்களாக தேங்கி தற்போது மூலவரையும் சுற்றி தேங்கி நிற்பதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போதும் நல்ல வலுவுடன் உள்ள தரைக்கோட்டைகளில் வேலூர் கோட்டை பிரதானமாக விளங்குகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டையுடன் அதனுள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில், திருமண மண்டபம், வசந்த மண்டபம், உற்சவ மண்டபங்கள், மண்டபங்களை இணைக்கும் காரிடார் எனப்படும் தாழ்வாரம் ஆகியன அதில் பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்காகவே பேசப்படுபவை.அதோடு கோட்டையை சுற்றி அமைந்துள்ள அகழி அதற்கு மாலையாக அமைந்து சிறப்பு சேர்க்கிறது. இந்த அகழிக்கான நீர் வேலூர் மலைகளில் இருந்து வழிந்தோடி வரும் சிற்றோடைகளின் வழியாக கிடைத்தது. அதேபோல் பாலாற்றில் வரும் வெள்ள நீரும் அகழிக்கு வந்து சேரும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஷட்டர்கள் கோட்டையின் தெற்கு மற்றும் வடக்கிலும் அமைக்கப்பட்டன.

கோட்டை அகழியில் அதிகளவில் நீர் வரும்போது அது தானாகவே வெளியேறி பாலாற்றில் சேர்ந்துவிடும். அல்லது அகழியில் தண்ணீர் குறையும்போது பாலாற்றில் இருந்து தண்ணீர் அகழிக்கு வந்து சேர்ந்துவிடும். இதுபோன்ற கட்டமைப்புகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போனதால் தற்போது அகழிக்கு தொடர்ந்து நீர் கிடைப்பதிலும், அதிக மழை பொழிவு காரணமாக சேரும் உபரிநீர் வெளியேறுவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகத்தில் முழுமையாக தேங்கிய அகழியின் உபரிநீர் நேற்று அதிகளவில் வெளியேறி கோயில் கருவறையில் மூலவரை சுற்றி தேங்கி நின்றது.

இதை பார்த்து நேற்று காலை வழக்கமாக நடையை திறந்து கருவறைக்குள் நுழைந்த அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அர்ச்சகர்கள் மூலவருக்கு வழக்கமான அபிஷேக அலங்கார ஆராதனைகளை முடித்துவிட்டு கருவறையை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து பக்தர்கள் மூலவர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்கு பதில் உற்சவ மூர்த்திகளை ராஜகோபுரத்தின் கீழே நந்தீஸ்வரர் வாகனத்தின் மீது வைத்து பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதித்தனர். இது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.