கோத்தகிரி நேரு பூங்காவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற 13 வது காய்கறி கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவு பெற்றது.

நிறைவு நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் காய்கறிகளால் அமைக்கப்பட பல உருவங்களை கண்டு ரசித்தனர் . நிறைவு விழாவில் தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேடைகளில் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் முதல் கண்காட்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சி நேற்று துவங்கி இரண்டு நாட்கள் நடைப்பெற்றது

இரண்டு நாட்கள் நடைபெற்ற காய்கறி கண்காட்சியில் நுழைவாயில் பகுதியில் முருங்கைக்காய் தோகையுடன் மயில்கள் , கோவக்காய் ,பஜ்ஜி மிளகாய் ,சிவப்பு மிளகாய்களை கொண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மற்றும் பூங்காவின் மையப் பகுதியில் 1.15 டன் அளவில் நாட்டு கத்தரிக்காய்களால் திமிலும் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையன், கேரட் வண்ணத்துப்பூச்சி, 800 கிலோ பச்சை மிளகாய் களால் ஜோடி பச்சைக்கிளிகள், நாட்டுக் கத்தரிக்காய் மரகதப்புறா, சேனைக்கிழங்கால் நீலகிரி வரையாடு என காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் வியப்படைய செய்தது .
இன்றுடன் நிறைவடைந்த காய்கறி கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் நேரு பூங்காவில் குவிந்தனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலை துறையினர் போட்டியில் கலந்து கொண்டு அரங்குகள் அமைத்து காய்கறிகளால் பல்வேறு வடிவங்களை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
நிறைவு விழாவான இன்று காய்கறி கண்காட்சியில் காய்கறிகளால் ஆன வடிவங்களை அமைத்தவர்களுக்கும், கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கூடுதல் ஆட்சியர் கௌஷிக் பரிசு கோப்பைகளை வழங்கினார் .
நிறைவு விழாவில் விழா மேடையில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் படுகு மொழி பாடலுக்கு குழுவாக இணைந்து உற்சாகமாக நடனமாடினர் . அதேபோல் காய்கறி கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் நடனமாடி மகிழ்ந்து காய்கறி கண்காட்சியை பார்த்து ரசித்துச் சென்றனர் .