• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வீரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா தொகுப்பு

Byதன பாலன்

May 21, 2023

சிவகுமாரின் சபதம்,அன்பறிவு படங்களைத் தொடர்ந்து ஹிப் ஆப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம் வீரன். மேற்கண்ட இரண்டு படங்களும் வணிகரீதியாக படத்தை தயாரித்தவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம். இதனை தொடர்ந்துஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள வீரன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஹிப் ஆப் தமிழா ஆதி.மரகதநாணயம் இயக்குநர் சரவணன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதிபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ‘ஹிப் ஹாப்’ ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். சூன் 2 ஆம் தேதி வெளியாக உள்ள வீரன் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. இதனையொட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வீரன் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது
நிகழ்வில் கலந்து கொண்ட கதாநாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது,

“ஆதி சார் பயங்கர ஃப்ரண்ட்லி மற்றும் சப்போர்ட். காட்சிகளில் ஏதாவது குழப்பம் இருந்தால் அவரிடம் கேட்பேன். நடிப்பதற்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தார். இயக்குநர் சரவணனும் அப்படித்தான்”.

நடிகர் வினய் பேசியதாவது,

“இந்தப் படம் எனக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்பு சத்ய ஜோதி பிலிம்ஸில் நான் ஒரு படம் நடித்து இருந்தேன். ஹிப்ஹாப் ஆதி குறித்தும் எனக்கு தெரியும். அதுவும் இல்லாமல் இது ஒரு சூப்பர் ஹீரோ படம். முதல் நாள் நான் படப்பிடிப்பிற்கு சென்றபோது இயக்குநர் சரவணன் மற்றும் ஆதிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரியை பார்த்தேன். அப்போதே இந்த படம் சூப்பர் ஹிட் என எனக்கு தெரிந்து விட்டது. இது எனக்கு இரண்டாவது சூப்பர் ஹீரோ திரைப்படம். இதற்கு முன்பு தெலுங்கில் ஒரு படம் இது போல நடித்து இருக்கிறேன். அதனால் நான் கம்பேர் செய்து கொண்டே இருந்தேன். இயக்குநர் சரவணன் சிறப்பாக செய்து இருக்கிறார். இந்த சம்மர் என்டர்டெயின்மெண்டாக நிச்சயம் ‘வீரன்’ இருக்கும்”.

நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது,

” இந்த கதையில் 55 லிருந்து 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவராக நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தை நானே இயக்குநரிடம் கேட்டு வாங்கினேன். அந்த அளவுக்கு எனக்கு இது பிடித்திருந்தது. ‘வீரன்’ படத்தில் கதை ஒரு பக்கம் செல்லும். எங்களுடைய நகைச்சுவை ட்ராக் ஒரு பக்கம் செல்லும். நானும் காளி வெங்கட்டும் வரக் கூடிய காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது,

“நானும் முனிஷ்காந்த்தும் இந்த படத்தில் நகைச்சுவைக்காக இணைந்து நடித்திருக்கிறோம். இந்த படத்திற்கு முதலில் ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என நினைத்தேன். நாங்கள் அரை நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருக்கிறோம். அதுபோன்று ஒரு காட்சி இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். மற்றபடி இயக்குநர் சரவணன், ஹீரோ ஆதி, ஒளிப்பதிவாளர் என படத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் சரவணன் பேசியதாவது,

“கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் இந்த கதை எழுதி முடித்து விட்டேன். அப்போதே ஆதியிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையில் உள்ள ஃபேன்டசி சூப்பர் ஹீரோ விஷயங்கள் போன்றவற்றின் மீது நம்பிக்கை வைத்து இந்த கதை அவருக்கு பிடித்திருந்தது. இந்த படம் நடக்க காரணமாக இருந்த அர்ஜுன் சாருக்கும் நன்றி. ஆதி இரண்டு படம் இயக்கிவிட்டார் அவரை எப்படி ஹீரோவாக ஹேண்டில் செய்வீர்கள் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் அது போன்று எந்த முரணும் எங்களுக்குள் நடக்கவில்லை. அந்தளவுக்கு எங்கள் இரண்டு பேருக்கும் புரிதல் இருந்தது. ஒளிப்பதிவாளர் தீபக்குக்கு நன்றி. எடிட்டர் பிரசன்னாவை பற்றி இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சூப்பர் ஹீரோ கதை செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்த பொழுது, ஒரு கேரக்டருக்கு கையில் இருந்து எலக்ட்ரிக் பவர் வந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சொன்ன ஐடியா தான் கதையாக டெவலப் செய்தோம். ஆதியின் கதாபாத்திரத்திற்கு மட்டும் கீர்த்தி, கிட்டத்தட்ட ஒரு பத்து காஸ்டியூம் டிசைன் செய்தார். அவருக்கும் நன்றி. படத்தில் சூப்பர் ஹீரோ எலமெண்ட்டுடன் ஸ்டண்ட் வித்தியாசமாக இருக்கும். மேத்யூ சிறப்பாக செய்து இருக்கிறார். 35 – 40 நிமிடங்கள் படத்தில் சிஜி வரும். நாங்கள் கொடுக்கப்பட்டுள்ள பட்ஜெட்டுக்குள் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தோம். ஆனால் அதுவும் தாண்டி விட்டது. ஆனாலும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இன்னும் நிறைய டிபார்ட்மெண்ட் இருக்கிறது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர்களுடைய வேலை குறித்தும் நான் பகிர்ந்து கொள்கிறேன். ‘மின்னல் முரளி’, ‘வீரன்’ இரண்டு படத்தின் கதையும் ஒன்றா என்ற விஷயம் பலரும் கேட்கிறார்கள். ‘மின்னல் முரளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2018-ல் வெளியான போது நாங்கள் அந்த படத்தின் கதையையும், எங்கள் கதையையும் கிராஸ் செக் செய்துவிட்டோம். இரண்டும் வெவ்வேறு கதைகள். ‘வீரன்’ கதை ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே இது முற்றிலும் வேறு என்பது உங்களுக்கு தெரியும்” என்றார்.

நடிகர் ஆதி பேசியதாவது,

” வந்திருக்கும் எல்லோருக்கும் வணக்கம்! நான் இரண்டு வருடங்கள் தனிப்பட்ட காரணங்களால் படம் எதுவும் நடிக்கவில்லை. இருந்தும் என் மீது இவ்வளவு அன்பு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி! ‘வீரன்’ திரைப்படம் குடும்பங்களுக்கான ஒரு படமாக இருக்கும். இதற்கு முன்பு என்னுடைய படங்கள் அப்படித்தான் என்றாலும், இதில் குழந்தைகளுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஜூன் மாதம் பள்ளி திறக்கப் போகிறது என்றால் அதற்கு முன்பு, ஜூன் இரண்டாம் தேதி ‘வீரன்’ படத்தை குழந்தைகளுக்கு காட்டினால் நிறைவாக இருக்கும் என்ற அளவுக்கு இந்த படம் மீது நம்பிக்கை உள்ளது. நான் ஒரு 90’s கிட் என்பதால் எனக்கு சக்திமான் மிகவும் பிடிக்கும். அதுபோல, ‘வீரன்’ ஒரு தமிழ் சூப்பர் ஹீரோவாக நீண்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கும். இதனை வடிவமைத்த இயக்குநர் சரவணனுக்கு நன்றி. உடல் ரீதியாக மிகவும் சவாலாக இந்த படம் இருந்தது. அந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகள் எனக்கு இருந்தது. இதற்கு முன்பு நான் அது போன்ற ஆக்‌ஷன் செய்ததில்லை. ‘அன்பறிவு’ சமயத்திலேயே இதற்கான ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கி விட்டோம். சத்யஜோதி நிறுவனத்துடன் இது எனக்கு மூன்றாவது படம். என் மேல் நம்பிக்கை வைத்து இவ்வளவு தூரம் கூட்டி வந்த அவர்களுக்கு நன்றி! நான் இதுவரை நடித்த ஐந்து படங்களிலேயே இதுதான் பெரிய படம். படத்தில் வினய் சார் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் வந்ததும் படம் இன்னும் பெரிய அளவில் மாறியது. முனீஷ்காந்த், காளி வெங்கட் இருவரும் படத்திற்கு பெரிய பிளஸ். இந்த படம் ஹிட்டானது என்றால் அதன் கிரெடிட் பாதிக்கும் மேல் இவர்களுக்கும் நாங்கள் தர வேண்டும். சிங்கிள் பசங்க, கேரளா சாங் என என்னுடைய இரண்டாவது படத்தில் இருந்து ட்ரெண்டான அனைத்து பாடல்களுக்கும் சந்தோஷ் மாஸ்டர் தான் காரணம் அவருக்கும் நன்றி. சசி, ஆதிரா, காளி வெங்கட் முனீஷ்காந்த் என படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. நக்கலைட்ஸ், டெம்பிள் மங்கிஸ் என யூடியூபில் திறமையுள்ளவர்களை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளோம். ‘வீரன்’ நம் மண் சார்ந்த கதை என்பதால் இசையில் நிறைய விஷயங்கள் பரிசோதனை முயற்சியாக செய்திருக்கிறோம். மியூசிக்கலாக இந்த படம் பெரிதும் பேசப்படும். அதற்கு முக்கிய காரணம் என் நண்பன் ஜீவா. அவனுக்கு நன்றி. பொள்ளாச்சி பகுதியில் யாரும் இல்லாத ஒரு காட்டுக்குள் இதன் படப்பிடிப்பை கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் நடத்தினோம்.

படத்தில் குதிரையுடன் சில காட்சிகள் இருக்கும். குதிரைப் பயிற்சி என்பது சிறுவயதில் இருந்து எடுக்க வேண்டும் போல. அந்த அளவுக்கு இந்த வயதில் புதிதாக கற்றுக் கொள்வது எனக்கு சற்று சிரமமாகவே இருந்தது. இதில் குதிரைக்கு சிறு காயம் கூட ஏற்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம். அதைத்தாண்டி சில காட்சிகள் குதிரையில் தடுமாறிய போது ஒளிப்பதிவாளர் தீபக் அதை அழகாக சமாளித்தார். இதில் அவர் பங்கு மிகப் பெரியது. இப்படி இந்த படம் முழுக்கவே எங்களுக்கு சவாலான விஷயமாகவே இருந்தது. இப்படி நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சப்போர்ட் செய்து இருந்ததால் தான் இந்த படம் இப்பொழுது வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து என் படம் தியேட்டரில் வருகிறது. இங்கு கொடுக்கும் அதே அன்பை அங்கேயும் கொடுங்கள் ” என்றார்