

பிரான்சில், புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது, 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், இதன் மூலம், இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல நாடுகளில் அடுத்த கொரோனா அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று, டெல்டா வைரசை விட அதிவேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான கேமிரோனில் இருந்து வந்த பயணிக்கு முதன்முறையாக இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இது ஒமைக்ரானை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இது, 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஐஎச்யு பி.1.640.2 என இந்த கொரோனா வைரசுக்கு பெயரிட்டுள்ளனர்.ஆனால், பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை கொரோனா பிற நாடுகளில் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
