• Fri. May 10th, 2024

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி – உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் குற்றச்சாட்டு

ByP.Thangapandi

Feb 6, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உசிலம்பட்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மருத்துவமனையில் தேங்கும் குப்பைகள் முறையாக சேகரிக்கப்படாமல் மலை போல மருத்துவமனை வளாகத்திலேயே தேங்கி காட்சியளிப்பது மற்றும் பொதுமக்களின் கழிப்பறைகளும் சுகாதாரமற்ற சூழலில் காணப்படுவது குறித்தும் ஆய்வு செய்த பின் மருத்துவமனையின் இணை இயக்குனர் செல்வராஜ் இடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

அதன் படி உசிலம்பட்டி பகுதியில் நடைபெறும் கொலை வழக்குகளில் கொலையாகும் நபர்களின் உடல்களை உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தடயவியல் பிரிவு மருத்துவர்கள் இல்லாததால் அடிக்கடி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடல்களை கொண்டு சென்று உடற்கூறாய்வு செய்வதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுவதாகவும், இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், ரத்த பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மையங்களில் கர்ப்பிணி பெண்கள் காக்க வைப்பதாகவும், மருத்துவர்கள் பற்றாக்குறையால் கர்ப்பிணி தாய்மார்கள் அடிக்கடி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையை தடுக்க இணை இயக்குனர் செல்வராஜ் இடம் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அய்யப்பன்., பெரும்பாலும் கிராம புற மக்கள் அதிகம் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், மருத்துவர்கள் பற்றாக்குறையால் கிராமப்புற பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் அலைக்கழிக்கப் படுவதாக தெரிவித்தார்.

மேலும் விரைவில் முறையான மருத்துவர்கள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து நவீன மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என – உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *