• Mon. Apr 29th, 2024

ஈஷாவில் உமா நந்தினியின் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி..!

ByKalamegam Viswanathan

Oct 17, 2023

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பாடிய பெருமைக்குரியவர். ஈஷா நவராத்திரி விழாவின் 3-ம் நாளான இன்று (அக்.17) நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் தேவாரம் பாடிய பெருமைக்குரிய செல்வி. உமா நந்தினியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் நம் பாரத பண்பாட்டையும், தமிழ் கிராமிய கலைகளையும் அறிந்து கொள்ளும் விதமாக தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, 3-ம் நாளான இன்று பக்தி நயம் ததும்பும் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது. உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான செல்வி. உமா நந்தினி அவர்கள் பல்வேறு தேவாரப் பாடல்களை இன்னிசையுடன் கலந்து பாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.

சிறு வயதில் இருந்தே பக்தியுடன் தமிழ் திருமுறைகளை பாடி வரும் இவர் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். கொரோனா காலத்தில் 665 நாட்கள் 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு பாடி சாதனை படைத்தவர்.

முன்னதாக, தொண்டாமுத்தூர் யூனியன் சேர்மன் திருமதி. மதுமதி விஜயகுமார், யூனியன் கவுன்சிலர் கார்த்திகா பிரகாஷ், வெள்ளிமலைப்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் . நாகமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

நவராத்திரியின் 4-ம் தினமான நாளை (அக்.18) மாலை 6.30 மணிக்கு புராஜக்ட் சம்ஸ்கிரிதி குழுவினரின் ‘ஜுகல்பந்தி’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *