தாய்மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாய்மொழிகளின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1999 பிப்ரவரி 21-ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக கொண்டாட, யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, 2000-ம் ஆண்டு முதல் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ” தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை.
தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது. இனியும் வீழ்த்தும்.’எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் – இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே’ – எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.