• Sun. Apr 28th, 2024

உதயநிதி ஸ்டாலின்; இயற்கை நட்சத்திரம் அல்ல..செயற்கை நட்சத்திரம்..முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலினுக்கு பதில்..!

மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் ரோடு எஸ் எம் கே திருமண மண்டபத்தில் மஹாளய அமாவாசை முன்னிட்டு பார்வையற்றோருக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியார்களிடம் கூறியதாவது..,
கையாலாத நிர்வாகத் திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளது. அனைத்து திட்டங்களிலும் குளறுபடியின் மொத்த வடிவமாக உள்ளது. எந்த துறையும் முழுமையாக செயல்படவில்லை. 520 தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு அதை 100 சகவீதம் நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு ஸ்டாலின் பச்சைப்பொய் பேசி வருகிறார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பாதிப்படைந்த மக்கள் போராடி வருகிறார்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, 520 தேர்தல் வாக்குறுதிகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி கூறியுள்ளார்கள். அதில், வருடத்திற்கு 10 லட்சம் பேர் கல்லூரி முடித்துக் கொண்டு வெற்றிகரமாக வெளியே வருகிறார்கள். அதனை தொடர்ந்து 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்று கூறினார்கள். அதேபோல் ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறினார்கள் இதுவரை 11 ஆயிரம் மேற்பட்ட வேலை வாய்ப்பு தான் வழங்கப்பட்டுள்ளது முழுமையாக வழங்கப்படவில்லை.
காவிரியில் ஜீவாதார உரிமை பறிபோகிறது, மேகதாது அணை கட்டி விட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டு விடும். கிருஷ்ணசாகர், கபினி, ஹேமாவதி ஆகிய அணைகளில் 15 டிஎம்சி, 45 டிஎம்சி, 35 டிஎம்சி கொள்ளவு உள்ளது ஆனால் மேகதாது அணையை 69 டிஎம்சி கொள்ளளவு கொண்டு கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதுவரை முதலமைச்சர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போது மத்திய அரசை வலியுறுத்தி மட்டுமல்லாது, கர்நாடக அரசையும் வலியுறுத்தி, கண்டிக்க வேண்டும் என்று எடப்பாடியார் கேள்விகளை முன் வைத்தார் ஆனால் முதலமைச்சர் மழுப்பலாக பதில் கூறி திசை திருப்பினார். மாநில உறவுகள் முக்கியம், உரிமை என்பது அதைவிட முக்கியம், உரிமைகள் பறிபோனால் தமிழகம் பாலைவனமாக ஆகிவிடும். டெல்டா நெற்களஞ்சியத்தை காவு கொடுத்து விட்டு எதை காப்பாற்றப் போகிறோம்?
காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த தண்ணீரை இன்றும் வழங்கவில்லை. மேட்டூர் அணையில் 100 அடி இருக்கும் பொழுது ஸ்டாலின் எந்த ஆய்வு மேற்கொள்ளாமல் தண்ணீர் திறந்து விட்டார்.தற்போது 41 ஆண்டு காலம் இல்லாத அளவில் தற்போது மேட்டூர் அணை 39 அடிக்கு கீழே சென்று விட்டது சரியான திட்டமிடவில்லை இது விளம்பர அரசாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவைக்கு பயிர் காப்பீட்டை அரசு செய்யவில்லை. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் இருந்து இடுபொருள் மானியம் உட்பட ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 84,000 வழங்கினார். ஆனால் தற்போது ஒரு ஹேக்டேருக்கு 13,000 ரூபாய் வழங்கப்படுகிறது .அப்படி என்றால் ஒரு ஏக்கருக்கு 5,500 ரூபாய் ஆகும் இது யானை பசிக்கு சோளப்பொரி போல உள்ளது இது விவசாயி வயிற்றில அடிப்பது போல் இருக்கிறது.
ஒரு அரசு விழாவில் உதயநிதியை ஸ்டாராக இருப்பதால் துறையும் ஸ்டாராக வளர்ந்து இருக்கிறது என்று ஸ்டாலின் பாராட்டி உள்ளார். இங்கே விவசாயிகள் செத்து மடிகிறார்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, ஆசிரியர் போராட்டம் எதையும் நிவர்த்தி செய்யவில்லை, ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் இயற்கை நட்சத்திரம் இல்லை ,செயற்கை நட்சத்திரம்.தனது தாத்தா, தந்தை, குடும்ப செல்வாக்கால் செயற்கை நட்சத்திரமாக தான் உயர்ந்துள்ளார். மக்கள் செல்வாக்கால் ஜொலிக்கவில்லை செயற்கை நட்சத்திரம் பிறரின் வெளிச்சத்தில் தான் சார்ந்து இருக்கும் சுயமாக வெளிச்சம் தர முடியாது.
மகளிர் உரிமை காப்பதில் இந்தியாவிற்கு வழிகாட்டும் இயக்கமாக அதிமுக உள்ளது. புரட்சித்தலைவி அம்மா பெண் சிசுக்கொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்தார் இதற்கு அன்னை தெரசா பாராட்டினார். அதேபோல் மகளிர் காவல் நிலையங்கள், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் அதனை தொடர்ந்து எடப்பாடியார் செயல்படுத்தி வந்தார் .
அதேபோல் பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 இட ஓதுக்கீட்டை அம்மா கொண்டு வந்தார் அதை எடப்பாடியார் செயல்படுத்தினார். பெண் சமுதாயம் முன்னேற்றம் அடைய விதை விதைத்தது அதிமுக ஆகும். தமிழகத்தில் கொலை, கொள்ளை, கடத்தல் என நடக்காத நாட்கள் இல்லை தமிழகமே அமளிக்கடாக உள்ளது. சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் உள்ளிட்ட எதையும் பேச முடியவில்லை அங்கே ஜனநாயகம் எங்கே இருக்கிறது என்று நிலை உள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *