வேலூர் காகிதப்பட்டறையில் இயங்கி வரும் அரசு காப்பகத்தில் இருந்து இரண்டு சிறுவர்கள் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலத்துறை மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் காகிதப்பட்டறையில் அரசு காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 30 பேர் உள்ளதாகவும், இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இன்று மாலை வழக்கம் போல் இளைஞர்கள் பாதுகாப்பு பகுதியில் உள்ள திறந்தவெளியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலத்தை சேர்ந்த 19 வயது வாலிபரும், கோவையை சேர்ந்த 18 வயது வாலிபரும் சுவர் ஏறி குதித்து தப்பினர். இது குறித்து அரசு பாதுகாப்பு கண்காணிப்பாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் காப்பகத்தில் விசாரணை நடத்தினர்.
மேலும் தலைமறைவான இரண்டு வாலிபர்களை பிடிக்க வேலூர் புதிய பேருந்து நிலையம், வேலூர் பழைய பேருந்து நிலையம், காட்பாடி ரயில் நிலையம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 2023 மார்ச்சில் இதே அரசு பாதுகாப்பு இடத்தில் இருந்து தப்பியோடிய 6 பேர் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டு பாதுகாப்பு இடத்தில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து மாயமான இரண்டு சிறுவர்கள்
