திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்பு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
அமலாக்கத்துறை டாஸ்மார்க் மேலான் இயக்குனர் விசாகனை விசாரணைக்கு அழைத்து சென்றது குறித்த கேள்விக்கு
டாஸ்மார்க் ஊழல் குறித்து அறிக்கை சமர்ப்பித்த பின்பு தான் என்ன ஊழல் நடந்தது என்பது தெரியவரும். தமிழ்நாடு அரசு நீதிமன்றம் வரை சென்று தற்போது விசாரணை செய்ய நீதிமன்றம் தடை இல்லை என தெரிவித்துள்ளது.

வாடிக்கையான நடவடிக்கை என்னவென்றால் தேர்தல் வரும் மாநிலங்களில் பாஜக எதிர்ப்பான அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை வேகமாக நடக்கும். இந்த குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் இவர்கள் சொல்வதை வைத்து எதுவும் நம்ப முடியாது.
தமிழக ஆளுநர் 18 மசோதாக்களில் 4 மசோதாக்களுக்கு அனுமதி அளித்துள்ளது குறித்த கேள்விக்கு,
உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. தீர்மானத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதனை ஏற்று வேண்டும். இந்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மனு செய்துள்ளனர். அது விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை தற்போது உள்ள நடைமுறையே செல்லும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு தான் ஆளுநர் செயல்பட வேண்டும்.
மத்திய அரசு ஜனாதிபதி மூலம் உச்சநீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பியது குறித்த கேள்விக்கு,
உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனுப்பும் மசோதாவிற்கு உரிய காலத்திற்குள் அனுமதி அளிக்க வேண்டும்.
இல்லை என்றால் மசோதா குறித்த கேள்விகளை அரசாங்கத்திடம் கேட்டு அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அந்தக் காலத்தை தாண்டி செயல்படக்கூடாது. அதுதான் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
ஆளுநர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு
அந்த தீர்ப்புக்கு குறித்த விளக்கத்தை உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி கேட்கலாம். அதற்கு பதில் கூறலாமா? வேண்டாமா? என்பதை உச்சநீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
பதில் அளிக்க தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார் என்றால் தனி அமர்வு அமைக்கப்படும். இதுபோன்று சில விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளித்துள்ளது. சில விஷயங்களை தலையிட விரும்பவில்லை என கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றம் விளக்கம் கொடுக்கலாம் விளக்கம் கொடுக்க தயாராக இல்லை எனவும் கூறலாம்.
ஜனாதிபதி விளக்கம் கேட்டுள்ளது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு,
மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மூலம் மாநில அரசை கட்டுப்படுத்த நினைக்கிறது. அதை சிதைக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு எதிர்க்கும் நோக்கில் இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளது. இதை தமிழக முதலமைச்சர் எதிர்த்துள்ளார். மேலும், மற்ற மாநில முதல்வருடன் கலந்து ஆலோசிக்க உள்ளார் என்ற செய்தியை அறிந்துள்ளேன். அதனை நான் ஆதரிக்கிறேன்.
இந்தியா கூட்டணி வலுவிழந்து வருகிறது என்பது குறித்த கேள்விக்கு
இந்தியா கூட்டணி தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் வலுவாக இருக்கிறது. ஒற்றுமையாக இருக்கிறது. தேர்தலை ஒற்றுமையாக சந்திக்கப் போகிறது. வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், மகாராஷ்டிராவில் சரத் பவர் கட்சி, அஜித் பவர் கட்சியுடன் இணைய போவதாக செய்திகள் வருகிறது. அப்படி இணைந்தால் இந்தியா கூட்டணியை விட்டு வெளியே போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியுடன் முழுமையாக செயல்படுவது கிடையாது. இப்படி பார்க்கும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு இலக்கணம் இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வலுவாக உள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் மீண்டும் இந்த கூட்டணியை ஒன்றிணைத்து வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எண்ணம்.
அதிமுக – பாஜக தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விக்கு,
காங்கிரஸ் தயாராக உள்ளது. இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். இந்திய அளவில் இந்தியா கூட்டணியை காங்கிரஸ் தலைமை தாங்குகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க முழு தயாராக உள்ளோம்.
அமலாக்கத்துறை சோதனை என்பது வரும் தேர்தலில் அரசியலை பாதிக்குமா? என்பது குறித்த கேள்விக்கு,
எந்த மாநிலத்திலும் மத்திய அரசு ஏஜென்சி மூலம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியலை பாதிக்காது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை முடக்குவதற்காக பயன்படுத்தும் ஏஜென்சிகளாக தான் நான் பார்க்கிறேன் தவிர தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்த கேள்விக்கு,
234 தொகுதிகள் மட்டுமே உள்ளது. திமுகவுடன் புதிதாக கூட்டணி அமைக்கும் கட்சிகள் பொறுத்து அந்த நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படும். துணை முதல்வர் பதவி உட்பட எதையும் முன்வைக்கவில்லை. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். சுமுகமாக தொகுதிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பொறுத்து தனிக்கட்சி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் ஆதரவு கருத்து கூறுபவர்கள் பாகிஸ்தானிற்கு செல்லுங்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு,
புரிந்து பேசுகிறாரா? இல்லை புரியாமல் பேசுகிறாரா? என்பது தெரியவில்லை.
மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறினாலே அது பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தா?
ஆப்ரேஷன் செந்தூர் நடந்ததுக்கு பின்பு அனைத்து இந்திய மக்களும் இந்திய ராணுவத்திற்கு பின்பே இருக்கிறோம்.
இந்திய ராணுவத்தையோ? இந்திய அரசையோ? குறை சொல்லவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினார்கள் என்பதை அவர் தெளிவாக கூற வேண்டும். பஹல்காம் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், பாகிஸ்தான் மீது பொருளாதார ரீதியாக, ராஜாங்க ரீதியாக, அழுத்தத்தை கொடுத்து தான் ஆக வேண்டும்.
மற்ற சம்பவத்தையும் இதையும் ஒப்பிட முடியாது. இது மத ரீதியாக பிரித்து மக்களை கொன்று உள்ளனர். பாகிஸ்தான் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளும் வரை அழுத்தம் கொடுத்து தான் ஆக வேண்டும்.
நீட் தேர்வு ரத்து தொடர்பாக திமுக கொடுத்த வாக்குறுதி குறித்த கேள்விக்கு,
நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் வரவில்லை. நீட் குறித்த ஐடியா வந்திருக்கலாம். காங்கிரஸ் ஆட்சியில் நீட் ஒரு மாநிலம் ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம். அதை கட்டாயம் ஆக்கியது இன்றைக்கு உள்ள பாஜக அரசாங்கம் தான்.
காங்கிரஸ் கட்சியை தவறாக சித்தரிக்க வேண்டாம்.
நீதிமன்றம் ரீதியாக அல்லது மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் போதே நீட் தேர்வு மாறும். தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை. ஆனால், அதனை அமல்படுத்தும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை.
மாநில அரசு கையில் அதிகாரம் வைத்துக் கொண்டு அதனை நிறைவேற்ற வில்லை என்றால் கூறலாம். அதிகாரம் இல்லாதபோது அதனை எவ்வாறு கூற முடியும். மத்திய அரசு அனுமதி இல்லாமலும், நீதிமன்றம் ஒப்புதல் இல்லாமல் நீட் தேர்வை தமிழகத்திலிருந்து நிராகரிக்க முடியாது.
மாநில அரசாங்கத்தின் எண்ணம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான்.
தமிழக அரசு முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, மற்ற மாநிலங்களுடன் பேசுவது என அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து வரும் பொழுது தான் மாறலாம்.
நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தற்போது வைக்க முடியாது.
வெளிநாட்டிலுள்ள கருப்பு பணங்கள் அனைத்தும் இந்தியாவிற்கு வந்துவிட்டது. என்றால் ரூ. 15 லட்சம் தருகிறேன் என்பது அவர்களது நோக்கம். அதேபோல் தான் இதுவும். எனவே, நீட் தேர்வை பொறுத்தவரையில் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அவர்கள் செய்யவில்லை என கூற முடியாது.
கச்சத்தீவை மீட்போம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகள் கொடுக்கின்றன ஆனால் கட்சி தீவை மீட்கும் அதிகாரம் மாநில அரசிலும் உள்ளதா என்றால் இல்லை. இதற்கு முயற்சி செய்கிறோம் அழுத்தம் கொடுக்கிறோம் என்பதுதான் அர்த்தம். அதேபோல் நீட் தேர்விலும் முயற்சி செய்வோம், அழுத்தம் கொடுப்போம் என்பதுதான் அர்த்தம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நான் கூறிய பின்பு தான் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது என்று கூறியது குறித்த கேள்விக்கு,
போர் நிறுத்தம் என்பதை நான் வரவேற்கிறேன். போர் வேண்டும் என யாராவது கூறினார்கள் என்றால் போர் குறித்த வழி தெரியாதவர்களே அதனை கூறுவார்கள். சமூக வலைதளத்தில் இருப்பவர்களே போர் வேண்டும் என கூறுவார்கள். தற்போது போர் நடைபெறக்கூடாது ஒருவேளை நடைபெற்றாலும் உடனே முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் நடுநிலையாக இருப்பவர்கள் கூறுவார்கள். இந்தியா எடுத்த நடவடிக்கையும் வரவேற்கிறேன் – இந்தியா போர் நிறுத்த அறிவிப்பையும் வரவேற்கிறேன்.
டிரம்ப் கூறும் கருத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் இடத்தில் இருப்பது மத்திய அரசாங்கம். எனவே, பாராளுமன்றத்தை கூட்டி பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என நான் கூறுகிறேன்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதற்கும் பின் வாங்க மாட்டார்.