• Thu. Apr 18th, 2024

8 மாதங்களில் ரயில் பயணிகள்
எண்ணிக்கை 76 சதவீதம் அதிகரிப்பு

8 மாதங்களில் மட்டுமே ரயில் பயணிகள் எண்ணிக்கை 76 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.43 ஆயிரத்து 324 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
நமது நாட்டில் கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில் பயணிகள் போக்குவரத்து துறை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கையில் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இதை ரயில்வே விடுத்துள்ள அறிக்கை காட்டுகிறது.
இந்த அறிக்கையில் கூறி உள்ள முக்கிய விஷயங்கள்:- ஏப்ரல்-1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையிலான கால கட்டத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கை 76 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரயில்வேயின் வருமானம் ரூ.43 ஆயிரத்து 324 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரயில்வே பயணிகள் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631 கோடிதான். முன்பதிவு செய்து பயணிக்கிற பயணிகள் பிரிவில் இந்த கால கட்டத்தில் 53 கோடியே 65 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் முன் பதிவு செய்து பயணித்த பயணிகள் எண்ணிக்கை 48 கோடியே 60 லட்சம் ஆகும். முன்பதிவு பயணிகள் பிரிவில் மேற்கூறிய 8 மாத கால வருமானம் ரூ.34 ஆயிரத்து 303 கோடி ஆகும். கடந்த ஆண்டு இது ரூ.22 ஆயிரத்து 904 கோடி ஆகும். இது 50 சதவீதம் அதிகரிப்பு ஆகும். ஏப்ரல் 1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையில் முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் மொத்தம் 352 கோடியே 73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 138 கோடியே 13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டில் 155 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் கடந்த 8 மாத காலத்தில் வருமானம் ரூ.9 ஆயிரத்து 21 கோடி. கடந்த ஆண்டு இது ரூ.1,728 கோடிதான். அந்த வகையில் இந்த வருமானம் 422 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *