மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலைய பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் தெரு நாய்களால் ரயில் பயணிகள் பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்வோர் அச்சமடைவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

சோழவந்தான் ரயில் நிலையம் ஆனது மதுரைக்கு அடுத்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. இங்கு தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புறம் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ரயில் நிலையத்தின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ரயில் நிலையபகுதிகள் முக்கியமாக பிளாட்பார பகுதிகள் பயணிகள் ஓய்வு எடுக்கக் கூடிய பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகிறது. இதன் காரணமாக ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளும் தெரு நாய்களால் பெரும் அச்சம் அடைவதாக புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தெரு நாய்கள் அங்கு இங்கும் சுற்றித் திரிவதும் ஒன்றுக்கொன்று குரைப்பதுமாக பொதுமக்கள் மட்டும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
இதனால் சில நேரங்களில் ரயில்களை தவற விடக்கூடிய சூழ்நிலையும் ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் அதிகாரிகள் ரயில் நிலையப் பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். ரயில் நிலைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






