தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள் , முதியோர் ஆகியோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய சிறுதானிய ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
இதற்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெண்கள் கலந்து கொண்ட சிறுதானிய ஊட்டச்சத்து உணவு திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் கம்பு கேழ்வரகு திணை குதிரவாளி சோளம் வரகு உள்ளிட்ட சிறுதானியங்களிலும் , உளுந்து பாசிப்பருப்பு துவரை நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான பருப்பு வகைகளிலும் , கொட்டை முந்திரி , பாதாம் பிஸ்தா பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்களிலும் பலவகையான உணவுகளை தயார் செய்து கூட்டரங்கில் பாரம்பரிய உணவு கண்காட்சியாக வைத்திருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட தேனி மாவட்ட உதவி திட்ட அலுவலர் அறிவழகன் தலைமையில் உதவி திட்ட அலுவலர் ஜெய்கணேஷ், வட்டார மேலாளர் திலகம் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஒவ்வொரு ஊராட்சி சார்பாக பெண்கள் கூட்டமைப்பிலர் தயார் செய்து வைத்திருந்தனர்.
பாரம்பரிய சிறுதானிய உணவுப் பொருட்களை சுவைத்து அவற்றில் முதல் மூன்று ஊராட்சிகளை தேர்வு செய்தனர்.
முதலிடம் பெற்ற ஊராட்சிக்கு 2500 ரூபாயும் இரண்டாவது இடத்திற்கு 2000 ரூபாயும் மூன்றாம் இடம் பெற்ற ஊராட்சிக்கு 1500 ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மேலும் அடுத்த மாதம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவு திருவிழா போட்டிகளில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று ஊராட்சிகளை சேர்ந்த பெண்கள் கூட்டமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் விழாவில் சத்தான உணவு , ஊட்டச்சத்து , உடல்நலம் , தன்சுத்தம் , சுகாதாரம் பேணுதல் ஆகியவை மூலமாக ரத்த சோகை இல்லாத மக்களை உருவாக்குவது குறித்தும் விளக்கப்பட்டது.
இந்த பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுத் திருவிழா போட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க 30 கிராம ஊராட்சி கூட்டமைப்பை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.