துணிக்கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா.அங்கு புதிதாக வரும் ஒரு பொம்மை அவருடைய காதலி போலவே இருக்கிறது. அந்த பொம்மையையே காதலிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த பொம்மையை இவர் இல்லாத நேரத்தில் ஒரு கடைக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள்.
பொம்மை காணாதது கண்டு பொங்கியெழும் எஸ்.ஜே.சூர்யா, ஒரு கொலையைச் செய்துவிட்டு அந்த பொம்மை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அங்கேயே போய் அந்த பொம்மையோடு வாழ்கிறார்.
கொலை தொடர்பான காவல்துறை விசாரணை நடக்கிறது? எஸ்.ஜே.சூர்யா மாட்டினாரா? இறுதியில் என்ன நடந்தது? என்பதுதான் படம்.
மனநலம் தவறிய வேடம் என்பது எஸ்.ஜே.சூர்யாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அருமையாகச் செய்துவிடுகிறார்.ஒவ்வொரு காட்சியையும் இரசித்து நடித்திருக்கிறார். அளவுக்கு அதிகமான நடிப்புகூட அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தருவது அவர் செய்த புண்ணியம்.
பொம்மையாக இருக்கும் பிரியாபவானிசங்கர் சிறப்பு. அள்ளிக்கொள்ளும் அழகு. முகபாவனைகளில் ஈர்க்கிறார்.
சாந்தினிதமிழரசனும் தன் பங்குக்கு சிறப்பு சேர்க்கிறார். அவர் இன்னும் கொஞ்சநேரம் வந்திருக்கலாம்.ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக அமைந்திருக்கின்றன. எஸ்.ஜே.சூர்யாவின் மிகை நடிப்பைப் பலமாக்க உதவியிருக்கிறார்.
யுவன்ஷங்கராஜாவின் இசை என்றாலும் படம் நெடுக இளையராஜாவின்
தெய்வீகராகம் பாடல் ஆட்கொண்டிருக்கிறது.மற்றபடி பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் படத்தைப் பாதுகாக்கிறார்.
ராதாமோகன் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் பிரியாபவானிசங்கரும் யுவன்ஷங்கர்ராஜாவும் இருக்கும்போது நமக்கென்ன கவலை என்று நினைத்துவிட்டார் போலும். அதனால் பல இடங்களில் படம் தொய்வடைகிறது.
கதாபாத்திரத்தின் புறவெளியைக் காட்டிலும் அகவெளியில் அதிகம் பயணிக்கும் நுட்பமான திரைக்கதை. அதைப் பார்வையாளர்களுக்குச் சரியான விகிதத்தில் கடத்துவதில் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றம் பலவீனம்.