• Wed. Jan 22nd, 2025

எறும்பு – திரைவிமர்சனம்

Byதன பாலன்

Jun 18, 2023

குணசித்திரநடிகர்களான சார்லி, எம்.எஸ்.பாஸ்கர்,ஜார்ஜ் மரியான்,சூசன் ஜார்ஜ் ஆகியோரோடு சிறுமி மோனிகாசிவா சிறுவன் சக்திரித்விக் ஆகியோரையும் வைத்துக் கொண்டு ஓர் உணர்வுப்பூர்வமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.ஜி.விவசாயக்கூலியான சார்லி, முதல் மனைவி இறந்ததால் சூசனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்கிறார். முதல் மனைவியின் குழந்தைகள்தாம் மோனிகாசிவாவும்,சக்திரித்விக்கும்.சூசனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடன் தொல்லையால் கஷ்டப்படும் சார்லி, மனைவி சூசனுடன் கரும்பு வெட்டும் கூலி வேலைக்காக வெளியூர் சென்று விடுகிறார்.

அப்போது சூசனின் குழந்தை மோதிரத்தை எடுத்து சிறுவன் சக்தி கார்த்திக்கிடம் அவரது பாட்டி கொடுக்க, விளையாடும் போது அந்த மோதிரத்தை சிறுவன் தொலைத்து விடுகிறான். மோதிரம் தொலைந்த விசயம் சித்திக்குத் தெரிந்தால் சிக்கல் என்று பயப்படும் சிறுவன் தனது அக்காவிடம் விசயத்தைச் சொல்கிறான்.பாட்டிக்குக் கூடத் தெரியாமல் தொலைந்த மோதிரத்திற்கு பதிலாக புதிய மோதிரம் வாங்கி வைத்துவிட முடிவு செய்கிறார்கள்.

அதற்காக பல்வேறு வேலைகளைச் செய்து பணம் சேர்க்கிறார்கள். மறுபக்கம் வேலைக்குச் சென்ற இடத்தில் கிடைத்த பணத்தை வைத்துக் கடனை அடைக்க முடியாது என்பதால் மோதிரத்தை அடகு வைக்க முடிவு செய்கிறார் சார்லி. மறுபக்கம் மோதிரம் வாங்கும் அளவுக்கு பணம் சேர்க்க முடியாமல் சிறுவர்கள் தடுமாறுகிறார்கள்.இறுதியில் என்னவாகிறது என்பதுதான் படம்.

சார்லி ஒட்டுமொத்த விவசாயக்கூலிகளின் பிரதிநிதியாகவே இருக்கிறார். அவருடைய நடிப்பும் வசனங்களும் அம்மக்களின் அவலங்களை எடுத்தியம்புகின்றன.
சிறுமி மோனிகாசிவாவும் சிறுவன் சக்திரித்விக்கும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகவும் குறைவு. நிஜமான கிராமத்தில் ஒளிப்பதிவுக்கருவியை ஒளித்து வைத்துப் படம் பிடித்தது போல் அவர்களுடைய முகபாவங்கள் அமைந்திருக்கின்றன. பல இடங்களில் கண்கலங்க வைத்துவிடுகிறார்கள்.

சித்தி என்பதற்கான உருவமாக இருக்கிறார் சூசன்.அவருடைய பார்வையிலும் அதை வெளிப்படுத்துகிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் வேடமும்
அதில் அவர் நடித்திருக்கும்
விதமும் சிறப்பு.

ஜார்ஜ்மரியான் இந்த வேடத்துக்கெனவே பிறந்தது போலவே நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
அருண்ராஜின் இசை அளவாகவும் இனிமையாகவும் இருக்கிறது.
கே.எஸ்.காளிதாசின் ஒளிப்பதிவு அவ்வளவு இயல்பாக அமைந்து திரைக்கதைக்குப் பலம் சேர்க்கிறது.இயக்குநர் சுரேஷ்.ஜி எளிய நடிகர்களை வைத்து வலிமையான படம் கொடுத்திருக்கிறார்.
எறும்பு சிறியது அதன் உழைப்பு பெரியது.