தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாகக் காணப்படுவதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கடைக்கோடியான தனுஷ்கோடி தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவில் உருவான புயலால் அழிந்த ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் பாம்பனுக்கு தென்கிழக்கே, ராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையுடன் கடல்வாணிகம் செய்ய ஒரு காலத்தில் தனுஷ்கோடி தான் மிகச்சிறந்த துறைமுகமாக விளங்கியது. வங்காளவிரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் இது. புகழ் பெற்ற இந்த கடலில் குளித்தால் தான் தங்களது காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்பிக்கை.
இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து சீற்றத்துடன் கடல் காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்கின்றனர். தனுஷ்கோடியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே, சுற்றுலா பயணிகள் அனுமதி குறித்து அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது