சி எம் சார்… உங்களுக்கு பழிவாங்கணும்னு எண்ணம் இருந்தா, என்னைத் தொடுங்க. என் தொண்டர்களை விட்டுருங்க என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 4 1 பேர் பரிதாபமாக இறந்தனர். அன்று இரவு திருச்சிக்கு சென்ற விஜய்யிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள், ‘சார்… கரூர்ல 30 பேர் இறந்திருக்காங்க சார்…’ என்று கேட்டபோதும் பதிலேதும் சொல்லாமல் விமானம் ஏறச் சென்றார். அதன் பின் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
பின் செப்டம்பர் 28 ஆம் தேதி காலை, உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தவெக சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் விஜய்.
இந்நிலையில் விஜய், தகவலைக் கேள்விப்பட்டதும் கரூருக்குத் திரும்பாதது, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காதது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்தன.
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தரும் வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில்…
“என் வாழ்நாளில் இது போன்ற வலி மிகுந்த சூழ்நிலையில் நான் உணர்ந்ததில்லை… மனது முழுக்க பெரும் வலி மட்டும்தான்!
இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் திரள்வதற்கு காரணம் அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் மட்டும்தான்.
மக்களின் பாதுகாப்பு விஷயத்தை மட்டுமே முன்னிறுத்தி அதில் எந்த சமரசம் செய்து கொள்ள கூடாது என்பதால் தான்… அதற்கு ஏற்ற இடங்களை நாங்கள் காவல்துறையிடம் பரப்புரைக்காக வேண்டி கேட்போம். ஆனால் நடக்கக் கூடாதது நடந்து விட்டது.
நானும் மனுஷன் தானே… எப்படி என்னால் இவ்வளவு நடக்கும் போதும் கரூரை விட்டுவிட்டு கிளம்பி வர முடியும்? நான் திரும்ப அங்கே செல்வதாக இருந்தால் அதை காரணம் காட்டி வேறு சில பதட்டங்கள் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதால் தான் அங்கு செல்வதை நான் தவிர்த்தேன்.
என்னுடைய சொந்தங்களை சந்திக்க நான் நிச்சயம் வருவேன்.
எங்கள் வலிகளை உணர்ந்து எங்களுக்காக பேசிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிட்டத்தட்ட ஐந்து மாவட்டங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறேன்… ஆனால் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்குது? எப்படி நடக்குது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துகிட்டு இருக்காங்க. கரூரை சேர்ந்த மக்கள் இந்த உண்மைகளை எல்லாம் வெளியே சொல்லும் போது அந்தக் கடவுளே இறங்கி வந்து சொல்வது போல இருக்கிறது. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்.
எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நின்று பேசியது தவிர நாங்கள் எந்த தப்பும் செய்யல.
ஆனாலும் எங்கள் கட்சி தோழர்கள் நிர்வாகிகள் சோசியல் மீடியாக்களில் கருத்துக்களை இந்த பதிவு செய்யும் நண்பர்கள் தோழர்களை போலீசார் பிடிச்சுகிட்டு இருக்காங்க.
சிஎம் சார்… உங்களுக்கு ஏதாவது பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க… நான் வீட்டிலோ அல்லது ஆபீஸ்ல தான் இருப்பேன்.
அவங்க மேல கை வைக்காதீங்க… என்னை என்ன வேணாலும் செய்யுங்க.
நமது அரசியல் பயணம் இன்னும் ஸ்ட்ராங்கா இன்னும் தைரியத்தோட தொடரும்” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் விஜய்.
விஜய்யின் இந்த வீடியோவில் முக்கியமான 3 விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒன்று… கரூரில் நடந்த சம்பவத்தில் தவெக மீது எந்தத் தவறும் இல்லை. மற்ற இடங்களில் அமைதியாக நடந்த பரப்புரை கரூரில் மட்டும் ஏன் இப்படி ஆக வேண்டும் என்ற கேள்வி…
இரண்டாவது, எனக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சிகளுக்கு நன்றி…
மூன்றாவது, கரூருக்கு உடனடியாக நான் திரும்பி வந்தால் அங்கே பதற்றம் ஏற்பட வாய்ப்பிருந்ததால் வரவில்லை…
நான்காவதாக, கட்சி நிர்வாகிகள் தோழர்கள் தன் மீதான நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதால், ‘வேண்டுமானால் என் மீது கை வையுங்கள். என் கட்சியினர் மீது வைக்காதீர்கள்’ என்று முதலமைச்சருக்கு சவால் விட்டிருக்கிறார் விஜய்.
