• Fri. Mar 29th, 2024

அளவுக்கு மிஞ்சினால் உப்பும் நஞ்சு!

‘உப்பு எதற்காக’ என்று கேட்டால், ‘சுவைக்காக’ என்றுதான் சொல்லத் தோன்றும். ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி உப்பின் தேவை குறித்து எடுத்துச்சொல்கிறது! உண்மையில், ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று வள்ளுவர் சொன்னது போல உடலில் அதிகமானாலும் குறைந்தாலும் பல நோய்களை உருவாக்கும் வல்லமை கொண்டது உப்பு. உப்பு குறித்தான தகவல்கள்!

தாய்ப்பாலும் தருது உப்பு!
சோடியம் குளோரைடு என்ற ரசாயனப் பொருளை தான் நாம் உப்பு என்கிறோம். உடலில் உள்ள நீரின் அளவு, ரத்தத்தின் அளவு இரண்டும் குறையாமல் இருக்கவும், இதயத்தின் செயல்பாடு சீரான முறையில் இருக்கவும், நரம்புகளின் மூலம் செய்திகளை உடலின் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு அனுப்பவும், உப்பில் உள்ள ரசாயனப் பொருட்கள் உதவியாக இருக்கின்றன. இந்தத் தேவை நாம் குழந்தையாக இருக்கும்போது தொடங்கி விடுகிறது. அதனால்தான் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு உப்புச் சத்தைக் கொடுக்கிறது.

கூடினாலும்… குறைந்தாலும்…
உடலில் சோடியம் அதிகமானால் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்குகிறது. அதன் தொடர்ச்சியாக சிறுநீரகக் குறைபாடுகள், இதய நோய்கள் என்று பல பெரிய பிரச்சனைகள் வரலாம். இதற்குக் காரணம், மனித உடல் ஒரு வலைப் பின்னல் போல ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது தான். சிறுநீரகங்கள் ரத்தத்தை சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிக உப்பின் காரணமாக, சிறுநீரகங்களுக்கு வேலை அதிகமாவதால், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட கூடும். இதயத்தின் ரத்த நாளங்களில் படியும் நுண்ணிய துகள்கள் இதய நோய்களை உருவாக்கக் கூடும்.

உடலில் உப்பு குறைந்தால் உடலில் உள்ள அமிலத்தன்மையின் சமன் குலையும். உடலுக்குள்ளிருக்கும் செல்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதற்கு உள்ளும் புறமும் சுரப்பிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. செல்லுக்குள் சுரக்கும் திரவத்துக்கு பொட்டாசியம் தேவை. செல்லுக்கு வெளியே திரவம் சுரக்க சோடியம் தேவை. இதை ‘ஆசிட் பேஸ் பேலன்ஸ்’ என்று சொல்வார்கள். உப்பு சாப்பிடுவதை தவிர்த்தால் உடலில் சோடியம் பற்றாக்குறை ஏற்படும். இந்த சோடியம் பற்றாக்குறையை சமன் படுத்துவதற்கு, செல்லுக்குள் இருக்கும் பொட்டாசியத்தை எடுத்துக்கொள்ள செல்கள் முயற்சிக்கும். இதனால் செல்லுக்குள் இருக்கும் திரவம் வெளியில் வரும். இந்த வேதி மாற்றத்தால் செல்கள் சுருக்கமடைந்து உடலின் அமிலத்தன்மை குலையவும் வாய்ப்புள்ளது!

வயிற்றில் அமிலத்தன்மை அதிகமானால் அசிடிட்டி வருவது போல, சோடியம் பற்றாக்குறையால் உடலில் அமிலத்தன்மை குளறுபடிக்கு உள்ளாகிறது. இதுதவிர வியர்வை, சிறுநீர் என்று கழிவுப் பொருட்களின் மூலமும் உப்புச் சத்து வெளியேறுவதால் அதை சமன் செய்வதற்காகவும் தினசரி நமக்கு உப்பு தேவை.

ஒரு நாள்… ஒரு டீஸ்பூன்…
ஆரோக்கியமான ஒருவருக்கு தினமும் 2.3 கிராம் முதல் 2.5 கிராம் உப்பு தேவை. இது கிட்டத்தட்ட ஒரு டீஸ்பூன் அளவு. நம் இந்திய உணவு முறையில் இந்தத் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் கவலைக்குரிய விஷயம். அதை சீராக்குவது நம் கையில் தான் உள்ளது என்பதே நிதர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *