• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற மேரி கியூரி நினைவு தினம் இன்று (ஜூலை 4, 1934).

ByKalamegam Viswanathan

Jul 4, 2023

மரியா மேரி ஸ்லொடஸ்கா கியூரி (Marie Salomea Skłodowska-Curie) நவம்பர் 7, 1867ல் போலாந்தின் வார்சாவில் பிறந்தார். இவரது பெற்றோர் பிரபலமான ஆசிரியர்களான பிரோநிஸ்லாவா மற்றும் வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி ஆவர். போலாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால் மரியா மற்றும் அவரது மூத்த சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை வாழ மிகவும் சிரமப்பட்டனர். மரியாவின் தந்தை வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கற்பித்தார். அவர் இரண்டு வார்சா பள்ளிகளுக்கு இயக்குனராக இருந்தார். ரஷ்ய அதிகாரிகள் செயல்முறை கற்பித்தலை பள்ளிகளிலிருந்து நீக்கியபின் தனது ஆய்வுக்கூடத்தின் கருவிகளை வீட்டிற்கு எடுத்துவந்து தனது குழந்தைகளுக்கு அவைகளின் செயல்பாட்டை விளக்கினார். மரியாவின் தாயார் பிரோநிஸ்லாவா ஒரு உறைவிடப் பள்ளியை நடத்தி வந்தார். ஆனால் மரியா பிறந்தவுடன் அவர் தனது இப்பணியை கைவிட்டார். மரியாவின் பன்னிரெண்டாவது அகவையில் காசநோயால் அவர் இறந்தார்.

தனது பத்தாவது அகவையில் மரியா ஜே.சிகொர்ச்கா என்னும் உறைவிட பள்ளியில் சேர்ந்தார். அதிலிருந்து ஜூன் 12, 1883ல் தங்கப்பதக்கத்தோடு வெளியேறினார். அடுத்த ஆண்டை தனது தந்தையின் குடும்பத்தினருடன் கிராமத்தில் கழித்தார். பிறகு வார்சாவில் தனது தந்தையுடன் வாழ்ந்தார். அப்போது சிறிதாக பயிற்சி வகுப்பு நடத்தினார். பெண் என்பதால் மேற்படிப்பிற்கு அங்குள்ள நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளப்படாததால் பிளையிங் பல்கலைகழகம் என்னும் போலிஷ் பாடத்திட்டம் நடத்தும், ரஷ்ய அதிகாரிகளை எதிர்க்கும் மற்றும் பெண்களை சேர்த்துக்கொள்ளும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மரியா தனது அக்கா பிரோநிஸ்லாவாவுடன் ஒரு உடன்படிக்கை போட்டுக்கொண்டார். அதன்படி பிரோநிஸ்லாவாவின் மருத்துவப் படிப்பிற்கு தன்னால் முடிந்த அளவிற்கு மரியா பணம் கொடுப்பார். மாறாக பிரோநிஸ்லாவா இரு வருடங்களுக்கு பிறகு மரியாவிற்கு பண உதவி அளிப்பார். இதற்காக மரியா வார்சாவில் ஒரு வீட்டு ஆசிரியராக பணிபுரிந்தார்.

1890ன் தொடக்கத்தில், திருமணமடைந்த பிரோநிஸ்லாவா மரியாவை தன்னோடு பாரிசில் வந்து இணைந்துகொள்ள அழைத்தார். ஆனால் அப்போது பல்கலைகழகத்திற்கு பணம் செலுத்த தன்னோடு போதிய பணம் இல்லாததால் மரியா அங்கு செல்லவில்லை. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மரியாவிற்கு போதிய பணம் திரட்ட தேவைப்பட்டன. இக்காலத்தில் மரியாவின் தந்தை அவருக்கு உதவி செய்து வந்தார். இந்த காலங்களில் எல்லாம் மரியா நிறைய படித்தார். 1891 வரை தனது அப்பாவுடன் மரியா இருந்தார். இக்காலங்களில் மரியா பயிற்சி வகுப்பு நடத்தினார். பிளையிங் பல்கலைகழகத்தில் படித்தார், தனது செயல்முறை அறிவியல் பயிற்சியை அங்குள்ள தொழிற்சாலை மற்றும் விவசாய அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு வேதியியல் ஆய்வுக்கூடத்தில் தொடங்கினார். இந்த ஆய்வுக்கூடம் மரியாவின் அத்தை மகன் ஜோசெப்பால் நடத்தப்பட்டது. ஜோசப் புகழ்பெற்ற ரஷ்ய வேதியியலாளர் மேண்டெலீவின் கீழ் பணிபுரிந்தவராவார்.

1891 முடிவில் மரியா போலாந்தை விட்டு பிரான்சிற்கு சென்றார். பாரிசில் சிறிது காலம் தன் அக்காவின் வீட்டில் தங்கினார். பின்பு பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கினார். சோர்போன் பல்கலைகழகத்தில் அவர் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பயின்றார். அங்கு தனக்கு கிடைக்கும் சிறிதளவு பணத்தோடு அவர் குளிர்காலத்தில் குளிரில் வாழ்ந்தார். மேலும் சில நேரங்களில் அவர் மயங்கியும் விழுந்தார். மேரீ காலையில் படித்து மாலைகளில் பயிற்சி வகுப்பு எடுத்தார். 1893ல் அவர் இயற்பியலில் ஒரு பட்டம் பெற்றார். அதன்பின் பேராசிரியர் காப்ரியலின் ஆய்வுக்கூடத்தில் அவர் வேலை பார்த்தார். இந்த சமயத்தில் அவர் சோர்போனில் தனது படிப்பைத் தொடர்ந்தார். தனது இரண்டாவது பட்டத்தை 1894ல் பெற்றார். மேரீ தனது ஆய்வுகளை பாரிசில் தொடங்கினார். முதன்முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதே வருடம் பியரி குயுரி மேரீயின் வாழ்க்கையில் வந்தார். இருவருக்கும் ஒத்தாக உள்ள அறிவியல் ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் பள்ளியில் பியரி ஓர் ஆசிரியராக இருந்தார். பேராசிரியர் ஜோசப் கொவால்ஸ்கி இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் மேரீ ஒரு பெரிய ஆய்வுக்கூடத்தை வேண்டுவதை அறிந்திருந்ததாலும் பியரி அத்தகைய ஓர் ஆய்வுக்கூடத்தை அணுகக்கூடிய வாய்ப்பு பெற்றிருந்தவர் என்பதை அறிந்திருந்ததாலும் இவ்வாறு செய்தார்.

இருவருக்கும் இடையே இருந்த அறிவியல் மீதான அதீத ஆர்வம், இருவரையும் நெருக்கமாக கொண்டுவந்தது. பியரி மேரீயிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளக் கேட்டுக்கொண்டார். மேரீயோ தான் தன் தாய்நாட்டிற்கு திரும்பிவிடத் திட்டமிட்டிருப்பதாக கூறினார். பியரி தானும் அவருடன் போலாந்து வரத் தயாராக உள்ளதாக கூறினார். இச்சமயத்தில் மேரீ வார்சாவிற்கு வந்து தன் குடும்பத்தை பார்வையிட்டார். அதுவரை அவர் தனது துறையில் போலாந்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் அப்போதுதான் அது ஒரு மாயை என்று அறிந்தார். ஏனெனில் க்ரோகௌ பல்கலைகழகத்தில் தான் ஒரு பெண் என்பதால் அவருக்கு அங்கு வேலை தரப்படவில்லை. பியரியிடமிருந்து மேரீக்கு இச்சமயத்தில் ஒரு கடிதம் வந்தது. அது அவரை பாரிசிற்கு திரும்பத் தூண்டியது. மேரீயின் தூண்டுதலால் பியரி காந்தவியலில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அது அவருக்கு ஒரு முனைவர் பட்டத்தை அளித்தது. மேலும் அது அவரை தனது பள்ளியில் ஒரு பேராசிரியராக உயர்த்தியது. 26 ஜூலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் இரண்டு பொழுதுபோக்கு கொண்டிருந்தனர், நெடிய மிதிவண்டி பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள். இவை இருவரையும் மேலும் நெருக்கமாக கொண்டு வந்தது.

1895ல் ரோன்ட்ஜென் எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார். ஆனால் அது எப்படி உருவாகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. 1896ல் பெக்கிவிரல் யுரேனியம் உப்புகளும் எக்ஸ்-ரே கதிர்கள் போன்ற கதிர்களை வெளியிடுகின்றன என்று கண்டார். மேலும் அவர் இக்கதிர்கள் வெளியிலிருந்து வரும் ஆற்றலால் அல்லாமல் யுரேனியத்திலிருந்தே வருவதை கண்டார். மேரீ ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக எக்ஸ்-ரே கதிர்களை ஆராய்ந்தார். மேரீ ஒரு புத்தாக்கமான திறமையை பயன்படுத்தி யுரேனியத்தை ஆராய்ந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பியரியும் அவரது சகோதரரும் எலேக்ட்ரோமீட்டர் என்னும் ஒரு கருவியை மேம்படுத்தியிருந்தனர். இது மின்சாரத்தை மிக நன்றாக கண்டறியும். இதனை பயன்படுத்தி யுரேனியக்கதிர்கள் சுற்றியுள்ள காற்றில் மின்சாரத்தை உண்டாக்குகின்றன என்று மேரி கண்டார். இதை பயன்படுத்தி யுரேனியத்தின் அளவைப் பொறுத்தே அதன் கதிர் வெளிப்பாடு இருப்பதாக மேரீ கண்டறிந்தார். மேலும் அவர் இக்கதிரியக்கம் அனுக்களிலிருந்தே வரவேண்டும் என்ற ஹைபாதசிசின் கீழ் செயல்பட்டார்.

1897ல் மேரீக்கு ஐரீநே என்னும் மகள் பிறந்தாள். குயுரிகள் ஒரு நல்ல ஆய்வுக்கூடத்தை கொண்டிருக்கவில்லை. இவர்கள் தங்கள் ஆய்வுகளை பெரும்பாலும் இயற்பியல் மற்றும் வேதியியல் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு கூடத்தில் நடத்தினர். அக்கூடம் நன்றாக காற்றோட்டமோ அல்லது நீர்புகா அமைப்போ கொண்டிருக்கவில்லை. அவர்கள் கதிரியக்கத்தை கையாளுவதால் வரும் ஆபத்துக்களை அறிந்திருக்கவில்லை. ஆதலால் பிற்காலத்தில் தங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்பள்ளி அவர்களுக்கு எந்த நிதியும் அளிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சுரங்க நிறுவனங்கள் மற்றும் மற்ற பிற நிறுவனங்கள் சிலவும் பண உதவி அளித்தன. மேரீயின் கதிரியக்க ஆய்வுகள் இரண்டு யுரேனிய மினெரல்களைக் கொண்டிருந்தன, பிட்ச்பிளென்ட் மற்றும் சாள்கோலைட். அவரது எலேக்ட்ரோமீட்டர் ஆய்வுகள் மூலம் பிட்ச்பிளென்ட் யுரேனியத்தைவிட நான்கு மடங்கும், சாள்கோலைட் இரண்டு மடங்கும் அதிக கதிரியக்க செயல்பாடு கொண்டிருப்பதை மேரீ கண்டார். இதன் மூலம் இவ்விரு மிநேரல்களும் யுரேனியம் அல்லாத வேறொரு தனிமத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தார். இதனால் அவர் கதிரியக்க ஆற்றல் கொண்ட பிற தனிமங்களை கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தார். 1898ல் தோரியமும் கதிரியக்க ஆற்றல் கொண்டிருப்பதை கண்டார்.

மேரீக்கு அவரது கண்டுபிடிப்பை ஒரு கட்டுரையாக பதிப்பிக்க வேண்டிய தேவை தெரிந்திருந்தது. ஆதலால் அவரது கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரையை அவரது பேராசிரியர் லிப்மான் ஏப்ரல் 12, 1898ல் ‘அகாடமி’க்கு அளித்தார். அச்சமயத்தில் மேரீ அவரது கட்டுரையில் எவ்வளவு முக்கியமான ஒரு வாக்கியத்தை பதிவு செய்திருந்தார் என்பதை எவரும் கவனிக்கவில்லை. அது என்னவெனில் பிட்ச்பிளென்ட் மற்றும் சாள்கோலைட் ஆகியவற்றின் கதிரியக்க செயல்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதாகும். இது அவை யுரேனியம் அல்லாத வேறொரு தனிமத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டின. ஜூலை 1898ல் மேரீயும் அவரது கணவரும் ஒரு கட்டுரை வெளியிட்டனர். அதில் அவர்கள் ஒரு புதிய தனிமத்தை கண்டுபிடித்ததை தெரிவித்தனர். அதற்கு மேரீ ‘பொலோனியம்’ என்று தன் தாய்நாட்டை பெருமைப்படுத்துவதற்காக பெயரிட்டார். டிசம்பர் 26, 1898ல் இன்னொரு தனிமத்தை கண்டுபிடித்து அதற்கு ரேடியம் என பெயரிட்டனர். மேலும் radioactivity என்ற சொல்லை கதிரியக்கத்திற்கு பெயராக இட்டனர். தங்கள் கண்டுபிடிப்பை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்க பொலோனியம் மற்றும் ரேடியத்தை முழுமையாக பரிசுத்தமாக பிரித்தெடுக்க மேரீகள் களமிறங்கினர். பிட்ச்பிளென்ட் நிறைய தனிமங்களை கொண்ட ஒரு மினெரலாகும். போலோனியத்தை கண்டுபிடிப்பது சிறிது சுலபமாக இருந்தது. ஏனெனில் வேதியியல் ரீதியாக அது பிஸ்மத்தை ஒத்திருந்தது. மேலும் பிஸ்மத்தை ஒத்த தனிமமாக பிட்ச்பிளென்டில் இது மட்டுமே இருந்தது. ஆனால் ரேடியத்தை கண்டுபிடிப்பதோ கடினமாக இருந்தது. ஏனெனில் அது பேரியத்தை ஒத்திருந்தது. மேலும் பிட்ச்பிளென்டில் பேரியமே இருக்கிறது. இறுதியாக 1902ல் ஒரு டன் பிட்ச்பிளென்டில் இருந்து 0.1 கிராம் ரேடியம் குலோரைடை பிரித்தெடுத்தனர். 1900ல் மேரீ ‘‘இகோலே நார்மொலே சுபீரியூரீ’’யில் முதல் பெண் பேராசிரியரானார். ஜூன் 1903ல் மேரீ தனது முனைவர் பட்டத்தை பாரிஸ் பல்கலைகழகத்திலிருந்து பெற்றார். இதற்கிடையில் ஒரு புதிய தொழிற்சாலை ரேடியத்தை மேம்படுத்தி எடுக்க ஆரம்பித்தது. குயுரிகள் இதை பேடேன்ட் செய்யாததால் இந்த வணிகத்தில் எந்த லாபத்தையும் ஈட்டிக்கொள்ளவில்லை.

டிசம்பர் 1903ல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் ச்சிஎன்செஸ் மேரீ, பியரி மற்றும் பெக்குறேல் ஆகியோருக்கு இயற்பியல் நோபெல் பரிசை, அவர்கள் கதிரியக்கத்தின் மீது நடத்திய மிக முக்கியமான ஆராய்ச்சிகளுக்காக அளித்தது. ஏப்ரல் 19, 1906ல் பியரி ஒரு சாலை விபத்தால் மரணமடைந்தார். இது மேரீக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. மே 13, 1906ல் சொர்போன் பல்கலைகழக இயற்பியல் கழகம் பியரி அங்கு கொண்டிருந்த பதவியை மேரீக்கு வழங்கியது. ஒரு உலகத்தரமான ஆய்வுக்கூடத்தை பியரியின் ஞாபகத்தில் உருவாக்கலாம் என்று மேரீ அப்பதவியை ஏற்றுக்கொண்டார். மேரீ சோர்போன் பல்கலைகழகத்தின் முதல் பெண் பேராசிரியரானார். 1911ல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் மேரீக்கு இரண்டாம் நோபெல் பரிசை, இம்முறை வேதியியலில் வழங்கியது. இப்பரிசு மேரீ ரேடியம், பொலோனியம் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்து, ரேடியத்தை பிரித்தெடுத்து, அதன் பண்புகளை ஆராய்ந்ததை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில் அந்த பரிசை பெற்ற முதல் பெண் மேரி கியூரி தான். அதே போல முதன் முறையாக நோபல் பரிசை இரண்டு முறை அதுவும் வெவ்வேறு துறைகளில் வென்றவரும் அவர் தான்.

மேரி 1934ன் முற்பகுதியில் கடைசி முறையாக போலந்து சென்றார். இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற மரியா ஸ்லொடஸ்கா மேரி கியூரி ஜூலை 4, 1934ல் தனது 66வது அகவையில் மேரி பச்சியில் உள்ள சன்செல்லிமொஸ் சானடோரியத்தில் ஆண்டாண்டு காலமாக கதிரியக்க வெளிப்பாடோடு பழகியதால் வந்த அப்பிலாச்டிக் இரத்த சோகையால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவர் பையில் கதிரியக்க ஓரிடத்தான்கள் கொண்ட சோதனை குழாய்களை வைத்திருக்கிறார். மேலும் அவைகளை தனது மேசையிலும் வைத்திருக்கிறார். யுத்தத்தின் போது மருத்துவமனைகளில் ஒரு கதிரியக்கராக பணியாற்றியபோது ஒழுங்கான உபகரணங்கள் அணிந்திருக்கவில்லை. அதனாலும் அவருக்கு ஆபத்து நேர்ந்தது. மேரீ தனது கணவர் பியரியுடன் ச்கேயுக்ஸில் புதைக்கப்பட்டார். அறுபது வருடங்களுக்கு பிறகு, 1995 ஆம் ஆண்டில், தங்கள் சாதனைகளின் நினைவாக, பாரிஸ் பாந்தியனுக்கு இருவரின் கல்லறைகளும் மாற்றப்பட்டன. இதுவரை இப்படி மரியாதைபடுத்தப்பட்டிருக்கும் ஒரே பெண் மேரீதான். 1890 காலத்து அவரது ஆவணங்கள் கையாள மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவைகள் கதிரியக்க வெளிப்பாடு கொண்டிருக்கின்றன. அவரது சமையல் புத்தகம்கூட அதிக கதிரியக்க வெளிப்பாடு கொண்டதாகும்.