• Fri. Apr 26th, 2024

மக்களே உஷார்… செப்.30 முதல் இதற்கு தடை..!

TN Assembly

75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்ளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு 2023-ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு இன்று கூறியுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மெய்யநாதன் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, 25.6.2018 நாளிட்ட அரசாணை 84ல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மீது தடிமன் வரைமுறையின்றி பயன்படுத்த தடை அறிவித்து, 1.1.2019 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்தடை ஆணையை செயல்படுத்த, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்தது.

அந்த நடவடிக்கைகளில், மாவட்ட சுற்றுச்சூழல் குழு கூட்டங்கள், மாவட்டந்தோறும் பெருந்திரள் கூட்டங்கள், விழிப்புணர்வு பேரணிகள், சமூக ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்பு பதாகைகள் நிறுவுதல் முதலியன உள்ளடங்கியுள்ளது. பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்தும் பொருட்டும் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் படியும், தமிழ்நாடு அரசு மீண்டும் 5.6.20 நாளிட்ட அரசாணை எண் 37ல் உற்பத்தி பகுதிகளில் பேக்கிங் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் பைகள்” மீதும் தடை விதித்தது.

இத்தடை ஆணையை மீறும் தொழிற்சாலைகள் மீது வாரியம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 115 தொழிற்சாலைகளை மூடுவதற்கு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 1.1.19 முதல் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கு தடையை கொண்டு வந்த போதிலும், தடை திறம்பட செயல்படுத்தப்படவில்லை.மேற்குறிப்பிட்ட ‘பிளாஸ்டிக் தடை’ வெற்றிபெற மேலும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இதற்கென்று தனியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வர்த்தக சங்கங்கள், சமூக மன்றங்கள், வணிகர் சங்கங்கள், குடிமக்கள் அமைப்புகள் இவைகளின் பங்குதாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகள் மூலமாக மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளது.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் இத்தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 12.8.21 அன்று திருத்தியமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள், 2021ஐ அறிவிக்கை செய்தது. இதன்படி, பிளாஸ்டிக் பொருட்களான 100 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக்/பிவிசி பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், உணவு உண்ண அல்லது பரிமாற பயன்படும் பொருட்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மொட்டுகள், அலங்காரத்திற்கான தெர்மோகோல் பொருட்கள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள் பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள் முதலியவை 1.7.22 முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் 60 கிராம்/சதுர மீட்டர் அளவிற்கு கீழ் உள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள் 30.9.21 முதலும், 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 31.12.22 முதலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *