மதுரை கிழக்கு ஒன்றியம் எல். கே. பி நகர் நடுநிலைப் பள்ளியில் அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடகத் திருவிழா, இளம் விவசாயிகள் படை உருவாக்கம், விளையாட்டு பொருட்கள் நன்கொடையாக வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை அனுசியா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் டாக்டர் மயூரி மற்றும் ஆசிரியை அருவகம் ஆகியோர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்தனர். அனைத்து ஆசிரியர்களும் பூ தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியை அகிலா அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, பேச்சாற்றல், அவரின் பொன்மொழிகள் ஆகியன குறித்து சிறப்புரை ஆற்றினார். முன்னாள் மாணவர் ரமேஷ் பள்ளிக்கு தேவையான விளையாட்டு பொருட்களை நன்கொடையாக வழங்கினார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தலைப்பில் கோமாளி வேடமணிந்து மாணவி கிருஷ்ணவேணி தலைமையில் நவீன நாடகம் நடைபெற்றது. தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருதாளர் சமூக ஆர்வலர் அசோக்குமார் விவசாயி போல் வேடம் அணிந்து விவசாய வேலைகளை விளக்கி இளம் விவசாயிகள் படை ஒன்றை பள்ளி மாணவர்களை வைத்து உருவாக்கி அவர்கள் மூலம் பனை விதைகளை பதியம் செய்து விளக்கினார்.
பதியம் செய்த இந்த பனை விதைகளை 120 நாட்கள் கழித்து தைப்பொங்கலை முன்னிட்டு பனங் கிழங்கு அறுவடை செய்வது என முடிவு செய்யப்பட்டது. சமூக ஆர்வலர் முராபாரதி அவர்கள் அண்ணாவின் 115 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 1150 நாட்டுமர ( வேம்பு, புளி, பாதாம், மருதம்) விதைகளை இளம் விவசாயிகள் படை மூலம் பதியம் செய்து விதை திருவிழா நடத்தி பள்ளியில் சிறிய நர்சரி ஒன்றை உருவாக்கினார். பனை மரம் பற்றிய வினாடி வினா நடைபெற்றது. சரியான விடை அளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை மனோன்மணி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தமிழ்செல்வி, அம்பிகா, சுகுமாரன், அனிதா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.