• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம்..,

BySeenu

Jul 2, 2025

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30 க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் கருதி 24 மணி நேரமும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு தபால் வந்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள முன்ஷிப் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துசாமி என்பவரது பெயரில் வந்த அந்த தபாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பிரித்து பார்த்தனர்.

அதை படித்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைப்பதற்கு சிலர் திட்டமிடுவதாகவும், அவர்கள் குறித்த தகவல் தனக்கு தெரியும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் கூறி எழுதி இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு கடிதம் எழுதியது யார் ? என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆய்வாளர் கந்தசாமி விசாரணை நடத்தினார். கடிதத்தில் எழுதி இருந்த செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துசாமியிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது தனது பெயரில் யாரோ ? ஒருவர் கடிதம் எழுதி இருப்பதாக கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை செய்த போது இதே போன்ற கடிதம் அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டது தெரியவந்தது.

இந்த கடிதம் அனுப்பிய நபர் யார் ? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கடிதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. இதைத் தொடர்ந்து கடிதத்தை அனுப்பிய நபரை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.