• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி.., 21பேர் மீது நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசு..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர், 17 போலீஸார் உட்பட 21 பேர் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 
தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம், மே 22-ம் தேதி போராட்டம் கலவரமாக மாறியதன் விளைவாக, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.   இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி, விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 18-ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் ஆணையத்தின் அறிக்கை 4 பகுதிகளாக நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையில்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் 100-வது நாளையொட்டி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்கூட்டியே தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மே 13 முதல் 22-ம் தேதி வரை போராட்டத்தின் தீவிரத்தன்மை படிப்படியாக அதிகரித்திருந்தது. குழப்பம் விளைவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு முன்கூட்டியே கைது செய்திருந்தால் போராட்டம் கலவரமாக மாறியதைத் தடுத்திருக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடு, அலட்சியம் மாவட்ட ஆட்சியர் தனது கடமையில் இருந்து தவறி அலட்சியமாக செயல்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. டிஐஜி மற்றும் உதவி எஸ்பி உத்தரவிட்ட துப்பாக்கிச்சூடு, ஐஜிக்கு கூட தெரியவில்லை. டிஐஜி தானாகவே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். அவரை 4 இடங்களில் வைத்து சுட வைத்துள்ளதன் மூலம், அவரை அடியாள்போல் காவல்துறை பயன்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் முதுகு பகுதியின் வழியாக குண்டு துளைத்து, முன் வழியாக உள்ளுறுப்புகளை சிதைத்து வெளியே வந்திருக்கிறது. இடுப்புக்கு கீழே யாரையும் சுடவில்லை. துப்பாக்கிச்சூடு நடைபெறும்போது கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல்துறையினர் வரம்பு மீறியும், அத்து மீறியும் செயல்பட்டிருக்கிறார்கள் என கூறியுள்ளது.
போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றபோதும், படித்த தகுதி வாய்ந்த இளைஞர்களைக் குறிவைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அனைவரின் உயிரிழப்பும் முதலாவது துப்பாக்கி சூட்டில் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 64 பேர் பலத்த காயமும், 40 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 17 பேர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த் துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஜஸ்டின் செல்வமிதிஷின் இறப்பை இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன 13 நபர்களுக்கு இணையாக பாவித்து அவரது குடும்பத்தாருக்கு அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பலத்த காயமடைந்த காவல்துறையைச் சேர்ந்த மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உள்துறை மற்றும் வருவாய் துறைகளின் மூலம் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ஆணையத்தின் ஆலோசனைகளை ஏற்று தொடர்புடைய துறைகளால் பொருத்தமான ஆணைகளை வழங்குவதற்காக விரிவாக ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், “துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ஆனால், அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் முதல்வருக்கு நிமிடத்துக்கு நிமிடம் தெரிவித்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அவர் கூறியது தவறானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்' - துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். ஆறுதல் கூறிய பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஹஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம்' என்றார். பின்னர், சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதால்தான் வன்முறை வெடித்தது. தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழகம் சுடுகாடாகத்தான் மாறும்’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆணையம் சார்பில் ரஜினிக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதற்கு ரஜினிகாந்த் எழுத்து மூலம் அளித்த பதிலில், “ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். அப்படி எந்த சமூக விரோதியையும் எனக்கு தெரியாது” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக ஆணையத்தின் அறிக்கையில், “சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று, தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினிகாந்த் போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.