• Fri. Apr 26th, 2024

இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு.. அரவிந்த்கெஜ்ரிவால்

Byகாயத்ரி

May 17, 2022

டெல்லியிலுள்ள பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு எனகூறி பொதுமக்களின் வீடுகளையும், கடைகளையும் இடித்துவருவது சுதந்திர இந்தியாவினுடைய மிகப்பெரிய அழிவு என முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார்.

தலைநகர் டெல்லியிலுள்ள மதன்பூர் காதரில் சென்ற வியாழக்கிழமை அன்று தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எஸ்.டி.எம்.சி) நடத்திய ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களுக்கும், டெல்லி காவல்துறையினருக்கும் இடையில் மோதல் நிலவியது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அமானதுல்லா கான் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ஒரு பெண் மற்றும் அவரது மைனர் மகள் உட்பட அந்த பகுதியின் 12 குடியிருப்பாளர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களுடன் அக்கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த்கெஜ்ரிவால் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்திற்கு பின் அரவிந்த்கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது “புல்டோசர்களை இயக்குவது ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வாகாது. தற்போது மாநகராட்சி தரப்பில் 63 லட்சம் மக்களுக்கு எதிராக புல்டோசர்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இது மிகப் பெரிய அழிவு ஆகும். அதே சமயத்தில் நாங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு ஆதரவாக இல்லை. எனினும் அந்த சிக்கலை சரி செய்வோம். அதற்காக புல்டோசர்களை இயக்குவது தீர்வு கிடையாது. தாதா, குண்டர்கள் போன்று செய்வது சரியில்லை. ஆகவே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது சரி கிடையாது. நான் எங்கள் எம்எல்ஏக்களுடன் ஒரு கூட்டம் நடத்தினேன். நாம் அனைவரும் மக்களுக்காக நிற்க வேண்டும்.

அதற்காக நாம் சிறைக்கு சென்றாலும் பயப்பட வேண்டாம். டெல்லி மாநகரமானது திட்டமிட்ட அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனிடையில் நகரத்தின் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு தான். அவ்வாறு இருக்கும் போது நகரின் 80 % பகுதிகளை பாஜகவினர் இடித்து விடுவார்களா.? 15 வருடகால டெல்லி மாநகராட்சி கார்ப்பரேஷன் ஆட்சியில் பாஜக என்ன செய்தது? தேர்தல் நடக்கட்டும், புதிய மாநகராட்சி கார்ப்பரேஷன் ஒரு முடிவை எடுக்கட்டும். எனவே ஆக்கிரமிப்பு பிரச்னையை தீர்த்து விடுவோம் என்று டெல்லிவாசிகளுக்கு உறுதியளிக்கிறோம். அத்துடன் அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்துவோம்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *