• Fri. Apr 26th, 2024

மன்னிப்பு கேட்டாலும் ஓ.பி.எஸ்.சை சேர்க்க வாய்ப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி

ByA.Tamilselvan

Sep 8, 2022

மன்னிப்புகேட்டு வந்தாலும் ஓபிஎஸ் சை சேர்க்கவாய்ப்பில்லை என அதிமுக தலைமை அலுவகம் சென்ற எடப்பாடி பழனிசாமி பேட்டி
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
அ.தி.மு.க. பொதுக்குழு ஒரு மனதாக ஒற்றைத் தலைமை என்பதை முடிவு செய்து இடைக்கால பொதுச்செயலாளராக நானும் மற்ற நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டார்கள். பொதுச்செயலாளருக்கான தேர்தல் விரைவில் தொடங்கும். பொதுக்குழு நடந்து கொண்டிருந்தபோது ஆட்சியாளர்களின் துணையோடு தலைமை கழகத்தில் ரவுடிகளுடன் புகுந்து கதவை உடைத்து ஓ.பி.எஸ். சூறையாடினார். கம்ப்யூட்டர்கள் சேதப்படுத்தப்பட்டன. வேண்டுமென்றே திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியவர்கள் மீது போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு கோர்ட்டுக்கு சென்றோம். கோர்ட்டு உத்தரவிட்டும் கிடப்பில் போட்டார்கள். மீண்டும் கோர்ட்டை நாடினோம். அப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக அறிவித்தார்கள். 32 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதான எதிர்கட்சி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டம்-ஒழுங்கு எந்த அளவு சீர் குலைந்துள்ளது என்பதை பார்த்துக்கொள்ளலாம்.
கழகம் எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும் சோதனைகளை சந்தித்து வந்துள்ளது. எல்லா சோதனைகளையும் வென்று சாதனை படைப்பது தான் வரலாறு. அ.தி.மு.க.வில் பிளவு என்பது கிடையாது. கட்சிக்கு விரோதமாகவும், எதிராகவும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் சிலர் செயல்பட்டார்கள். அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஓ.பி.எஸ். உயர்ந்த பொறுப்பில் இருந்தவர். அவரே ஒரு கொள்ளை கூட்டம் போல் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டார். இனி மன்னிப்பு கேட்டு வந்தாலும் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். இது தொண்டர்களின் இயக்கம். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் இணைத்து உயர்ந்த பொறுப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரோ தனக்கு சாதகமானதை மட்டும் தான் பேசுவார். பச்சோந்தியை போல் நிறம் மாறி கொண்டிருப்பவர். 96 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. சட்ட ரீதியாகவும் யாரும் எதையும் செய்து விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *