தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்ட நிகழ்வில் பட்டியல் இன பேரூராட்சித் தலைவரும், திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமுதாய அலுவலரும் அவமதிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தேனியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் சர்ச்சை ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்ட மேகமலை, மணலாறு பகுதியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வளரும் பருவத்தினர் திருமணம் செய்வது குறித்து ஏற்படும் பாதிப்பு குறித்து தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு தெரு நாடகங்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மா. சுப்ரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் மணலாறு பகுதியை உள்ளடக்கிய ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவி நதியாவுக்கு இருக்கை வழங்கப்படவில்லை. அவர் அமைச்சருக்கு பின்புறம் நிற்க வைக்கப்பட்டார்.
பேரூராட்சி தலைவர் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்ததால் சர்ச்சைக்கு மேல் சர்ச்சையானது அமைச்சரின் நிகழ்ச்சி.
இதுகுறித்து நாம் நதியாவை அரசியல் டுடே சார்பாக தொடர்புகொண்டபோது அவர் சார்பாக பேசிய சிலர், “அவங்க தனக் குரிய சீட் வேண்டும்னு கேட்டிருக்காங்க. இதுதான் புரோட்டாகால், மினிஸ்டர் வறதுனால சீட் இல்லைனு சொல்லிட்டாங்க” என்றனர்.
தெற்கே தேனியில் இப்படியென்றால் வடக்கே திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அலுவலரை வலுக்கட்டாயப்படுத்தி காலில் விழ வைத்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள் திமுக கவுன்சிலரும், சேர்மனின் கணவரும்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷணை காலனி பகுதியை சேர்ந்த முனியப்பன் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி செப்டம்பர் 2 ஆம் தேதி சமூக தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆணையர் அறையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தி.மு.க. கவுன்சிலர் ரம்யா உள்ளிட்ட பலர் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது இளநிலை உதவியாளர் முனியப்பன் திடீரென, கவுன்சிலர் ரம்யாவின் அருகே சென்று அவரது காலில் விழுகிறார். அழுதுகொண்டே ஏதோ சொல்கிறார், கையெடுத்துக் கும்பிடுகிறார்.
தனது வார்டு தொடர்பான பிரச்சினைக்காக முனியப்பனிடம் ஒரு ஃபைல் கேட்டதாகவும் ஆனால் அதை முனியப்பன் மதிக்காமல் தன்னை ஒருமையில் பேசியதாகவும் நகராட்சி அதிகாரிகளிடம் ரம்யா புகார் செய்தார்.
இதை ஒட்டிதான் அன்று பஞ்சாயத்து நடந்தது.
அப்போது நகராட்சி தலைவர் ரம்யாவின் கணவர் ரவிச்சந்திரனும் இருந்துள்ளார். அவங்ககிட்ட மன்னிப்பு கேள் என பலரும் வற்புறுத்தியதால், சாரிங்க சாரிங்க என்னை மன்னிச்சிடுங்க என்று கூறியுள்ளார் முனியப்பன்.
இப்படித்தான் மன்னிப்பு கேட்பாங்களா… சாரி கேட்டா போதுமா என்று ரம்யா மேலும் குரலை சூடாக்க., டக்கென அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் முனியப்பன்.
இது தொடர்பாக நகராட்சி மேலாளர் அளித்த புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் ரம்யா, நகராட்சி தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மன்னிப்பு கேட்கும்போது தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக முனியப்பன் மீது ரம்யாவும் ஒரு புகாரை போலீஸில் கொடுத்துள்ளார்.
தி.மு.க. கவுன்சிலர் ரம்யா திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில்,
“கடந்த 29-ந்தேதி மதியம் 2.45 மணி அளவில் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு பணி சம்பந்தமாக சென்று இருந்தேன். அப்போது நகராட்சியில் பணிபுரியும் முனியப்பன் கோப்புகளை தேடிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் அலுவலக பணியாளர் மகா என்பவரை உதவிக்கு வைத்துக்கொண்டு தேடுமாறு கூறினேன். அதற்கு முனியப்பன் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, ஒருமையில் பேசினார்.
முனியப்பன் நடந்து கொண்ட விதம் தொடர்பாக மாலை 5 மணி அளவில் எழுத்துப்பூர்வமாக புகார் எழுதிக் கொடுக்க ஆணையர் அலுவலகம் சென்றேன். அங்கு மற்ற அலுவலர்களும் இருந்தார்கள். ஆணையாளர் இல்லாததால், அவருக்காக காத்திருந்தேன். அப்போது நான் புகார் மனு எழுதிக்கொண்டு வந்ததை பார்த்த அதிகாரிகள், முனியப்பனை வரவழைத்து நீங்கள் அவர் மீது புகார் அளித்தால் அவரது பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும், எனவே புகார் அளிக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.
அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போதே, திடீரென முனியப்பன் தானாக மன்னிப்பு கேட்பதாக எனது காலில் விழுவது போல் விழுந்து, அவரது இடது கையால் என் இடுப்பின் பின்புறம் கையால் அறுவறுக்கத்தக்க வகையில் தவறாக நடந்து கொண்டார். பின்னர் நான் சுதாரித்துக் கொண்டு நாற்காலியை நகர்த்தி போட்டு உட்கார்ந்தேன். தவறாக நடந்த முனியப்பன் மீது நடவடக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக கவுன்சிலரின் நடவடிக்கைக்கு சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சியினரே கண்டனம் தெரிவித்துள்ளனர்.
