• Fri. Mar 29th, 2024

தேனி மாவட்டம் பாலைவனமாக மாறாது- அமைச்சர்- ஐ.பெரியசாமி

Byvignesh.P

Jun 2, 2022

வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயின் முதல் போக பாசன சாகுபடிக்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர். முல்லைப் பெரியாறு – மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தால் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறாது, எப்போதும் பசுமையான தேனியாகத்தான் இருக்கும். ஐ.பெரியசாமி பேட்டி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71அடி உயர நீர்த்தேக்கக் கொள்ளளவில் அமைந்துள்ளது வைகை அணை. மூல வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கிடைக்கப் பெறும் தண்ணீரால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5மாவட்டங்களில் உள்ள 2லட்சத்து 10ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைகின்றன. மேலும் தேனி, மதுரை மாவட்டங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபரில் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை இல்லாததால் முதல் போக பாசனத்திற்கே தாமதமாக வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்தாண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்மட்டம் உயர்ந்திருந்ததால் ஜூன் மற்றும் அக்டோபரில் தண்ணீர் திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூல வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணை ஆகிய இடங்களில் பெய்த மழையால் வைகையின் நீர்மட்டம் உயர்ந்தே காணப்பட்டது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து பெரியாறு – வைகை பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில் இன்று முதல் ஜூன் 2ஆம் தேதி முதல் 45நாட்களுக்கு 900கன அடி வீதமும், அதனைத் தொடர்ந்து 75நாட்களுக்கு முறைப்பாசனம் அடிப்படையில் என 120நாட்களுக்கு 6,739 மி.கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று வைகை அணையில் உள்ள 7பெரிய மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்து மலர் தூவி வரவேற்றனர்.‌ முன்னதாக மதகுகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பினால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 1,797ஏக்கரும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16,452ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26,792ஏக்கர் என ஆக மொத்தம் 45,041 நிலங்கள் பாசன வசதி அடைகின்றன. இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தண்ணீர் திறப்பதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சென்ற ஆண்டைக் தொடர்ந்து இந்த ஆண்டும் வைகை அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் பாசன தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து முல்லைப் பெரியாறு – மதுரை குழாய் வழி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கோடைக்கால வறட்சியின் போது மதுரைக்கு முழுமையாக குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மக்களை பாதிக்காத வகையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்துவார். இதனால் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறாது, எப்போதும் தேனி மாவட்டம் பசுமையான மாவட்டமாக தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *