“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” நிகழ்ச்சியில் கள்ளர் பள்ளி விடுதியில் மாணவர்களுடன் தேனி கலெக்டர் உணவு அருந்தினார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங் தங்கி இருந்து பல்வேறு துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ள உள்ளார். இன்று காலை உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கிடங்கியில் பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களின் தரம், அளவு, எடை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பொருட்களின் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் உத்தம பாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கலை மற்றும் அறிவியல் ( தன்னாட்சி) கல்லூரியில் தேனி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைக்கு எதிரான மாணவத்தூதுவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மாணவ மாணவிகள் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில் மாணவச் செல்வங்கள் எதிர்கால தலைமுறைகளை தாங்கி நிறுத்தக்கூடிய தூண்களாக விளங்குகின்றனர். இந்த தலைமுறையினர் போதைப் பொருள்களுக்கு எதிராக இருக்க வேண்டும், போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது போதை பழக்கத்தில் தங்களை சுற்றி உள்ளவர்கள் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து போதை ஒழிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரியில் இருந்து உத்தமபாளையம் நகரின் வீதிகளில் போதை ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கல்லூரியில் முதல்வர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து கோம்பை தேவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்துவிட்டு, மீண்டும் உத்தம பாளையத்தில் உள்ள அரசு கள்ளர் பள்ளி மாணவர்கள் விடுதிக்கு மதிய உணவை ஆய்வு செய்வதற்காக வந்தார். அங்கு மாணவர்களிடம் விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும், கல்வி கற்பதற்கான சூழ்நிலைகள், உணவு, தங்குமிடம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் இன்று மதிய உணவினை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில் மாணவர்கள் தங்களது குடும்பங்களை விட்டு பிரிந்து வந்து விடுதியில் தங்கி படிப்பதாக எண்ண வேண்டாம். இங்கு உள்ள நண்பர்களே உங்களுக்கு குடும்பங்களாக நினைக்க வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் மேலும் விளையாட்டு மற்றும் படிப்பு சார்ந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார். மேலும் தானும் இதுபோன்று சாதாரணமான விடுதியில் தங்கி படித்ததாகவும் அவர் பேசினார். இந்த ஆய்வின் தொடர் நிகழ்வாக இன்று மாலை உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து நாளை காலை வரை பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளார்.
