• Wed. May 8th, 2024

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்

ByG.Suresh

Apr 14, 2024

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற குடவரை கோவிலில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமான பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. சித்திரை முதல் தேதி குரோதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜையுடன் தங்க கவசத்தில் கற்பக விநாயகர் காட்சியளித்தார்.
உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். தமிழகம் முழுவதும் இருந்து வருகின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் சுயதொழில் புரிவோர் கோவில் வளாகத்தில் அமர்ந்து புது கணக்கு தொடங்கி வழிபாடு செய்தனர் தொடர்ந்து, காலை 9.45 மணி அளவில் வெள்ளி பல்லக்கில் கோவிலில் இருந்து நாதஸ்வரம் முழங்க சிவனின் பிரதிநிதியாகிய அங்குச தேவரும், விநாயகரின் பரிதிநிதியாகிய அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள குள படித்துறையில் எழுந்தருளினர். அங்கு தேவரா பாடல்களுடன் அங்குச தேவருக்கும், அஸ்திரதேவருக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆராதனை நடைபெற்றது. பின்னர் பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கோவில் குளத்தில் சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் வெகு சிறப்பாக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

இதை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வருகை தந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருகை தரும் பக்தர்களுக்கு சிரமம் இன்றி தரிசனம், காலை, மதியம், இரவு உணவு, குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ சேவை உள்ளிட்ட வசதிகள் கோயில் அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்ப செட்டியார் , பூலாங்குறிச்சி முத்துராமன் செட்டியார் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *