நாடு முழுவதும் பணியின்போது உயிர் நீத்த செய்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை தீயணைப்புத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மும்பையில் கடந்த 14.4.1944 -இல் கடலுக்குள் நின்றுகொண்டிருந்த கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட 60 -க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களைப்போல பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு ஆண்டு தோறும் ஏப்ரல் 14 -ஆம் தேதி தீயணைப்பு நிலையங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஒரு வாரத்துக்கு தீ விபத்துத் தடுப்பு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் சிவகங்கை மாவட்ட தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் எஸ்.செந்தில் குமார், தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் ஏ.கே.நாகராஜன், தீயணைப்பு மீட்பு வீரர்கள் பங்கேற்று நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.
இதேபோல, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, இளையாங்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.