கரூரில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தளை வேல் வழங்கப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கெளரி புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்த நாளை அவரது திருவுறுவப்படத்திற்கு மாலை அணிவித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்றும், முதல்வரின் 4 ஆண்டு சாதனை தொடர்பாக தெருமுனை கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தளையால் செய்யப்பட்ட வேல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.