• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மூன்றாவது நாளாக உலா வரும் காட்டுயானை..,

ByG. Anbalagan

May 7, 2025

தொட்டபெட்டா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உலா வரும் காட்டுயானை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக இன்று தொட்டபெட்டா மூடப்படும் மாவட்ட வன அலுவலர் கௌதம் பேட்டி கால்நடை மருத்துவ குழு, சிறப்பு பயிற்சி பெற்ற யானை விரட்டும் பழங்குடியினர் ,வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறையினர் என 60 பேர் 24 மணி நேரமும் யானையை கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் பர்லியார் மலைப்பாதையில் இருந்து தாயைப் பிரிந்து சில மாதங்களான சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று வழி தவறி, 200 ஆண்டு வரலாறில் எந்த ஒரு பதிவு இல்லாத அளவிற்கு தென்னிந்தியாவின் இரண்டாவது மலை சிகரமான தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு நேற்று முன்தினம், மாலை 5 மணி அளவில் ஒற்றை காட்டு  யானை நுழைந்தது .இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் உடனடியாக சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றி, யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இன்று சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா காட்சி முனை சுற்றுலா பயணிகள் அனுமதி  இன்றி மூடப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் யானையை கண்காணிக்கும் பணியில் மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் , யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் ,வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழுவினர், கால்நடை மருத்துவ குழு,  வனத்துறையினர் என 60 பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் யானையை கண்காணிக்க பணியில் ஈடுபட்ட நிலையில் நேற்று  இரவு சுமார் 7.15 மணியளவில் தொட்டபெட்டா மலை சிகரத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை, தொட்டபெட்டா நான்கு ரோடு சாலைக்கு வந்தது.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் உதகை – கோத்தகிரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது யானை, அருகில் உள்ள செடிகளுக்குள் சென்று மறைந்ததால், யானைக்கு மயக்க  ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தோய்வு ஏற்பட்டது .

இருப்பினும் யானை நடமாட்டத்தை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ,அதிநவீன ட்ரோன் கேமரா மூலமும், நேரடி கண்காணிப்பில்  வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் இரண்டாவது நாளாக தொட்டபெட்டா காட்சி முனை மூடப்படும் என மாவட்ட வன அலுவலர் கௌதம் செய்தியாளர்களிடம் கூறினார். யானை நாளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டப்படும் அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வன அலுவலர் கௌதம் கூறினார்.