• Sun. May 12th, 2024

வெம்பக்கோட்டை அகழாய்வின் போது கிடைத்த சுவர், புதிய மைல்கல்..!

Byவிஷா

Sep 5, 2023

வெம்பக்கோட்டை அகழாய்வின் போது, கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட சுவர் கிடைத்திருப்பது புதிய மைல்கல்லாகத் திகழ்கிறது என அகழாய்வு இயக்குனர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள வைப்பாற்றின் கரையோர பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை சார்பில் தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் நடத்தப்பட்ட முதல்கட்ட அகழாய்வில் 3254 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை 3600க்கும் அதிகமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் தங்க அணிகலன், பகடை காய், சுடுமண் பொருட்கள், சங்கு வளையல்கள், தங்க தாளி போன்ற பொருட்களை முக்கியமான பொருட்களாக குறிப்பிட்டு சொல்லலாம். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட தங்க தாலி வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் மற்றொரு மைல்கல்லாக கீழடி அகழ்வாராய்ச்சி போல இங்கும் சுவர் கட்டுமானம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (31.8.23) அன்று நடைபெற்ற அகழாய்வின் போது எட்டாவது அகழாய்வு குழியில் 5 அடி ஆழத்தில் செங்கல் மற்றும் கருங்கல் பயன்படுத்தி கட்டப்பட்ட வட்டவடிவிலான சுவர் ஒன்று கிடைத்துள்ளது. இந்த சுவர் கிடைத்ததன் மூலம் இந்த பகுதி முற்காலத்தில் முதுமக்கள் வாழிடமாகவோ அல்லது தொழிற்கூடமாகவோ இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *