விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரயில் நிலையம் 60 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போடுகிறது.
விருதுநகரின் மற்றொரு சகோதரனாக விளங்கும் அருப்புக்கோட்டை நகரம் சிவகாசி விருதுநகரை போல தொழில் வளர்ச்சிக்கு குறைவில்லாத ஊர். அப்படி பட்ட அருப்புக்கோட்டை நகரில் ரயில் சேவை வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.டி.ராமசாமி 1956 ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விருதுநகர் அருப்புக்கோட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
பல கட்ட முயற்சிக்கு பின்னர் 1963 ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அன்று அருப்புக்கோட்டை ரயில் நிலையம் பெருந்தலைவர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு, விருதுநகர் அருப்புக்கோட்டை இடையே முதல் இரயில் சேவை செப்டம்பர் 5 1963 முதல் தொடங்கப்பட்டது.
1963 முதல் 2023 வரையிலான 60 ஆண்டுகளில் விருதுநகர் அருப்புக்கோட்டை ரயில் பாதை திருச்சுழி, நரிக்குடி மானாமதுரை என நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ரயில் பாதை பணிகள் தான் அருப்புக்கோட்டை ரயில் பயணிகளின் கடைசி நம்பிக்கையாக உள்ளது. இப்பணிகள் முடிவடைந்து புதிய ரயில் சேவை வரும் பட்சத்தில் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் ரயில் சந்திப்பாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.