• Fri. Jun 9th, 2023

பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம்

ரவுடி படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது அமைதி மற்றும் பொது ஓழுங்கு பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி படப்பை குணாவை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்கின்ற குணா. தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த குணா ஒருகட்டத்தில் ரவுடி என்ற பட்டத்துடன் சுற்றிவந்தார்.

படப்பை குணா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்த ரவுடி குணா காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

ரவுடி குணா மீது எட்டு கொலை வழக்குகள் உட்பட 42 வழக்குகள் நிலுவையில் உள்ளது. நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட படப்பை குணா ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தலைமறைவானார். குணா தலைமறைவாக இருந்துகொண்டே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

குணா உள்ளிட்ட ரவுடிகளைப் பிடிக்க டிஎஸ்பி வெள்ளதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ரவுடி குணாவுக்கு உடந்தையாக இருந்த காவலர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோல் படப்பை குணாவுடன் தொடர்பில் இருந்த சிலரும் கைது செய்யப்பட்டிருந்தனர். குணாவின் மனைவி எல்லம்மாளை கடந்த ஜனவரி மாதம் போலீசார் கைது செய்தனர்.

குணாவின் மனைவி எல்லம்மாள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது கணவர் குணா சரணடைய தயாராக உள்ள நிலையில், அவரை காவல்துறை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குணா சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்குட்பட்டு நடத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த குணா, சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26ஆம் தேதி சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறையில் படப்பை குணா அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பொது அமைதியையும் பொது ஒழுங்கையும் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி, குணாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த கடிதம் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *