தமிழ்நாட்டில் இன்று வழக்கத்தை விட 3டிகிரி வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அந்த நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 18ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என கூறப்பட்டுள்ளது.அதிக வெப்பநிலை இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக சிலருக்கு அசவுகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மே 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.