• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

செஞ்சூரியன் டெஸ்ட்: 2ஆம் நாள் ஆட்டம் மழையால் தாமதம்

செஞ்சூரியனில் மழை குறுக்கிட்டுள்ளதால், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், லோகேஷ் ராகுலும் களமிறங்கி, தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா எதிர்கொண்ட முதல் பந்திலேயே கீகன் பீட்டர்சனிடம் கேட்சாகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 35 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி எங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய கே.எல் ராகுல் சதமடித்து அசத்தினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல் ராகுல் 122 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் நாளை அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால், போட்டி நடைபெறும் மைதானத்தில் மழை குறுக்கிட்டுள்ளதால், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் மழை பெய்து வந்த நிலையில், சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்தது. இதனையடுத்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால், போட்டி தொடங்குவதில் தாமதம் நீடிக்கிறது.