• Sun. May 5th, 2024

பணம் எண்ணும் இயந்திரத்தை பழுதாக்கி அதிரவிட்ட ரெய்டு..!

Byவிஷா

Dec 11, 2023

ஒடிசாவில் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய பணத்தை எண்ணும் இயந்திரத்தையே பழுதாக்கும் அளவிற்கு பணம் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரித்துறையின் சோதனையில் இந்திய வரலாற்றில் இதுவரை கைப்பற்றிடாத அளவுக்கு பணம் சிக்கியுள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சா{ஹவின் வீடுகளிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பீரோக்கள் மற்றும் பெட்டிகள் நிரம்ப பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை என்றாலும், 300 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மீட்கப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்திய நோட்டு எண்ணும் இயந்திரம், பழுதடையும் அளவுக்கு பணம் சிக்கியிருக்கிறது. ஒடிசாவில் உள்ள போலங்கிர், சம்பல்பூர் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, லோஹர்டகா ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் உள்ள பௌத் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் (பிடிபிஎல்) நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தீரஜ் சா{ஹ நடத்தி வரும் தொழிலுக்கும் தங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ல் வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், “எம்.பி. தீரஜ் சா{ஹவின் வணிகங்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை.

வருமான வரித்துறை அதிகாரிகளால் அவரது சொத்துக்களில் இருந்து எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு அவரால் மட்டுமே விளக்கம் அளிக்க முடியும். விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான மீனாட்சி லேகி, “சா{ஹவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணமே இதுவரை ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான ரொக்கப் பணமாகும்.
காங்கிரஸ் தலைமுறை தலைமுறையாக ஊழலைப் பரப்பி, ஊழலின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதை இது காட்டுகிறது. ஒரு காங்கிரஸ் தலைவரிடம் இருந்து 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் என்பதை அறிய அதிகாரிகள் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸின் அனைத்து ஊழல் தலைவர்களையும் ஒன்றாக சேர்த்தால், எவ்வளவு நோட்டுகள் மீட்கப்படும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *