மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கவணம்பட்டி ரோட்டில் மூன்று பள்ளிகள், தாலுகா காவல் நிலையம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்டவை உள்ளன.

தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த சாலையோரம் கடந்த மூன்று மாதத்திற்கு முன் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணி நகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.

சாக்கடை கால்வாய் தோண்டப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக மீண்டும் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த போது, போதிய நிதியில்லை என கைவிடும் சூழலில், திறந்த நிலையில் உள்ள இந்த சாக்கடை கால்வாயை வீடு மற்றும் கடைகளின் உரிமையாளர்களே தாமாக முன்வந்து கடந்த இரு தினங்களாக சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.,
பணம் இருக்கும் வீடு மற்றும் கடை உரிமையாளர்கள் தங்கள் வீடு மற்றும் கடை முன்பு சீரமைத்துக் கொள்ளும் சூழலில், பணம் இல்லாதவர்கள் திறந்த நிலையில் உள்ள சாக்கடை கால்வாயை ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் விரைவில் நிதி ஒதுக்கி சாக்கடை கால்வாயை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




