பனை மரங்கள் மூலம் இயற்கையை தூத்துக்குடி மக்கள் பாதுகாத்து வருவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அந்த மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டு மோடி பேசுவார்.

அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாம் இயற்கையை பாதுகாக்கும் போது, பதிலுக்கு இயற்கையும் நம்மை பாதுகாக்கும். இதனை நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்ந்திருப்போம். அதற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நல்ல உதாரணத்தை அளித்துள்ளார்கள் என்று கூறினார். கடலோரத்தில் இருக்கும் பகுதிகள் கடல் அரிப்பு காரணமாக காலப்போக்கில் அழிந்துபோவதை நாம் பார்க்கலாம்.
இத்தகைய ஆபத்தை எதிர்நோக்கும் சிறிய தீவுகள் தூத்துக்குடியில் உள்ளன. இவற்றின் நிலைமையை உணர்ந்த தூத்துக்குடி மக்களும், வல்லுனர்களும் இந்த தீவுகளில் பனை மரங்களை அதிகளவு நட்டு வருகிறார்கள்.இந்த மரங்கள் புயல், கடல் அரிப்பு போன்ற இயற்கை பேரிடர்களின்போது நிலைத்து நின்று நிலத்தை பாதுகாக்கின்றன. இதன் மூலம் தற்போது இதுபோன்ற ஆபத்தான பகுதியை, காப்பாற்றுவதில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.