தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை 1 ஆம் தேதி (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்! இந்நிலையில், பொங்கல் விழாவுக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி புதுச்சேரி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
புதுவையில் திங்கள் கிழமை முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், புதுச்சேரியில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு இதுவரை 454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் கொண்டு வர வாய்ப்புள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜன.12ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள தேசிய இளைஞர் தின விழாவில், இந்தியாவிலிருந்து 7,500 இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதனை பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி புதுச்சேரி வருகை தந்து துவக்கி வைக்க உள்ளார். விழாவில் பங்கேற்க உள்ள அனைவரும் முககவசம் அணிந்து இருக்க வேண்டும். 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுளளது என்றார்.