• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அரசின் திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் மக்களிடம் சேர்க்க வேண்டும்-முதல்வர் ஸ்டாலின்

ByA.Tamilselvan

Jun 2, 2022

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு அரசுத்துறை வாரியாக ஆய்வு செய்து வருகிறார். ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர் அரசின் திட்டங்களை சிந்தாமல்,சிதறாமல் மக்களிடம் சேர்க்க வேண்டும் என் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்காக துறை வாரியாக செயலாளர்கள், இணை செயலாளர்கள் பங்கேற்க கூட்டத்தில் நேற்று விரிவான ஆலோசனை மேற்கொண்டார். துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எந்த அளவுக்கு பணிகள் நடைபெற்றுள்ளது என்ற விவரத்தை அப்போது கேட்டறிந்தார்.
இன்று 2-வது நாளாகவும் அரசுத்துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மை கால்நடை, பள்ளிகல்வி, உயர் கல்வி உள்பட 21 துறை அதிகாரிகள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்
இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள், உத்தரவுகளையும் விடுத்தார்.இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நேற்றையதினம் இதேபோன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 16 துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் இறுதியில், அரசுச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் எவ்வாறு அரசின் திட்டங்களை வடிவமைத்து, செயலாக்கத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று விரிவாக எடுத்துக் கூறியிருந்தேன்.இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள துறைகளின் முக்கியத்துவம் கருதியும், இன்றைய ஆய்வில் நீங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், எனது எண்ணங்கள் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நேற்று நான் குறிப்பிட்டபடி, இந்த அரசானது தற்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.கடந்த ஆண்டு குறிப்பாக, புதிய அரசாக நாம் பொறுப்பேற்ற தருணத்தில், நமது மாநிலத்தையே முடக்கிப் போட்ட கோவிட் பெருந்தொற்று, வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் மோசமான நிதி நிலைமை என்று ஒரே நேரத்தில் பல சவால்களை நாம் எதிர்கொண்டு, அதில் ஓரளவிற்கு குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றோம்.
மக்கள் நலன் கருதியும், மாநிலத்தை ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், பல்வேறு அறிவிப்புகளை நாம் கடந்த ஆண்டு அறிவித்திருக்கிறோம்.
அப்படி அறிவித்த அறிவிப்புகளில் சிறப்பான வகையில் சில திட்டங்கள் செயலாக்கத்திற்கு வந்திருக்கிறது. அதற்காக முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இருந்தாலும், சில துறைகளில் இன்னும் அரசாணைகள் வெளியிடுவதில் தாமதம் காணப்படுகிறது. அதற்கான காரணங்களை நீங்கள் இங்கே தெரிவித்திருக்கிறீர்கள். அதையும் களைந்து விரைவான, தேவையான அனைத்து ஆணைகளும் நீங்கள் வெளியிட வேண்டும். இதில் நீங்கள் நேரடியாக கவனத்தை செலுத்த வேண்டும்.
அதுமட்டும் போதாது; ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளின் மூலம் அது கடைக்கோடி மக்களுக்குப் போய் சென்றடைந்திருக்கிறதா? அவற்றிற்குச் செயலாக்க வடிவமும் தர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.துறைத் தலைவர்களை வழி நடத்தி, மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஈடுபடுத்தி இதனை நீங்கள் உடனடியாக செய்ய வேண்டும். அதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.தொழில் துறையின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.
அது விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வந்து, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை நாம் பெருக்க வேண்டும். எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்.
புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அதை நீக்குவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும். குறிப்பாக, நில எடுப்பு மற்றும் அனுமதிகள் வழங்கல் போன்றவற்றைத் துரிதப்படுத்த வேண்டும். இதற்கு தொடர்புடைய பிற துறைகள் ஒத்துழைப்பு தந்திடவேண்டும்.மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் கோவிட் பெருந்தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது துறையின் அடிப்படையான மருத்துவ சேவைகளை மேம்படுத்தி வழங்கி, ஐ.எம்.ஆர்., மற்றும் எம்.எம்.ஆர். போன்ற குறியீடுகளை அனைத்து மாவட்டங்களிலும் கண்காணித்து, மருத்துவமனை நிர்வாகத்தினை மக்கள் மேலும் விரும்பும் வகையில், மக்கள் நண்பனாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், கிராமப்புற மக்களை மையமாகக் கொண்டு செயல்படும் ஊரக வளர்ச்சித் துறையானது குடிநீர் வசதி, ஊரக வீட்டு வசதித் திட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதிலும் சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.வேளாண்மைத் துறையைப் பொறுத்தவரையில், உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்துவதிலும், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய விவசாய சந்தைப்படுத்தல் துறையை பலப்படுத்திடவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களை பெருமளவில் அமைக்கவும் வேண்டும்.இதன்மூலம் மட்டுமே, விவசாயிகளின் வருமானத்தை நாம் அதிகரிக்க முடியும். ஆகவே, இதில் இத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.இதுபோன்று ஒவ்வொரு துறைக்கும், தனக்கான இலக்கு மக்கள் தொகை யார் என்பதை தெளிவாக உணர்ந்து, அவர்களுக்கு திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.தமிழக மக்கள் இந்த அரசின் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும்.
புதிய யுக்திகளை, அவை எங்கிருந்தாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால், அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி நீங்கள் செய்தால், உங்களை ஊக்குவிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது.ஒவ்வொரு துறைத் தலைவரும், தங்கள் அமைச்சருடன் இணைந்து, தனது துறையில் செம்மையாகச் செயல்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தையும், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் நிறைவேற்றிட வேண்டுமென்று அன்போடு கேட்டு, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.