

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று கலைஞரின் 99வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தை தொடர்ந்து முரசொலி அலுவலகத்திலும், கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய டிரோன் மூலம் கலைஞர் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன.
