• Fri. May 3rd, 2024

சென்னையில் 35 பயணிகளை ஏற்றாமல் விட்டுச் சென்ற விமானம்..!

Byவிஷா

Jul 26, 2023

சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா பயணிகள் விமானம், நான்கரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதோடு, அந்த விமானத்தில் பயணிக்க வந்த 35 பயணிகளை, விமானத்தில் ஏற்றாமல், 147 பயணிகளுடன் சென்னையில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்று விட்டதால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அபுதாபியில் இருந்து சென்னைக்கு இரவு 7 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு 7:45 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்டு செல்லும். நேற்று அந்த விமானத்தில், சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்வதற்கு 182 பயணிகள் பயணிக்க இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 4:30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டு, பாதுகாப்பு சோதனைகள் உட்பட அனைத்து விதமான சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம், அந்த நேரத்தில் சென்னை விமான நிலையப் பகுதியில் சூறைக்காற்று மழை இருந்த காரணத்தால், விமானம் சென்னையில் தரையிறங்காமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் விமானம் சென்னையில் தரையிறங்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. அது பற்றிய அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த விமானத்தில் அபுதாபிக்கு வேலைக்காக செல்லும் 5 பெண்கள் உட்பட, 35 பேர் ஒரு குழுவாக அமர்ந்திருந்தனர். மற்ற பயணிகள் தனியாக இருந்துள்ளனர். இதற்கு இடையே நள்ளிரவு 12 மணி ஆகியும் பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு அழைக்கவில்லை. இதை அடுத்து இந்த 35 பயணிகள், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் கவுண்டரில் போய் கேட்டபோது, உங்களோடு சேர்ந்த மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் வந்து ஏறி அமர்ந்து விட்டனர். நள்ளிரவு 12:18 மணிக்கு விமானம், சென்னையில் இருந்து, அபுதாபிக்கு புறப்பட்டு சென்று விட்டது. நீங்கள் இப்போது வந்து கேட்பதை ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து கேட்டிருக்க வேண்டும். இனிமேல் எதுவும் செய்ய முடியாது. உங்கள் போர்டிங் கேன்சல் ஆகிவிட்டது. நீங்கள் முறைப்படி ரீஃபண்ட் வாங்கிவிட்டு, மீண்டும் புதிதாக டிக்கெட் முன்பதிவு செய்து வேறு விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று விமான ஊழியர்கள் அலட்சியமாக கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த 35 பயணிகளும், சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளை சமாதானம் செய்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விமானம் இரவு 7:45 க்கு போக வேண்டியது, நள்ளிரவு 12:18 மணிக்கு, நான்கரை மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் இந்த நான்கரை மணி நேரம் தாமதம் பற்றி பயணிகளுக்கு எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை. மேலும் போர்டிங் பாஸ் வாங்கிய 35 பயணிகள் விமானத்தில் வந்து ஏறவில்லையே? ஏன் என்று, விமான ஊழியர்கள் இந்த பயணிகளை தேடவும் இல்லை.
இது பற்றி பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளை கேட்டபோது, ஏதோ எங்கள் தரப்பிலும் தவறு நடந்து விட்டது. ஆனாலும் இனிமேல் இதில் எதுவும் செய்வதற்கில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த 35 பயணிகளும் நாங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, அந்த விமான நிறுவன உயர் அதிகாரி, சென்னை விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசார் ஆகியோரிடம் புகார் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *