இன்று கார்கில் போரில் உயிர்நீத்தவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
1999ம் ஆண்டு கார்கில் மாவட்டம் திராஸ், கச்சார், படாலிக், துர்துக், ஆகிய பகுதிகளில் கடும் போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினரை விரட்டி வெற்றி வாகை சூடியது. கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது. அதைத்தொடர்ந்து, ஜூலை26 கார்க்கில் வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 24 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் கார்கில் விஜய் திவஸ் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மறைந்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டில், கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். உயிரிழந்தவீரர்களின் தியாகம் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். கார்கில் விஜய் திவாசை முன்னிட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மறைந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கார்கில் போர் வெற்றிதினத்தை முன்னிட்டு, டெல்லியில் மரியாதை செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,மக்கள் போரில் பங்கேற்க தயாராக இருக்க வேண்டும் என கூறினார். மேலும், தேசத்திற்கு தேவைப்படும்போது எல்லாம் ராணுவத்திற்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும், அண்மை காலமாக போர்கள் நீடித்து வரும் நிலையில், மக்கள் ராணுவத்திற்கு உதவ தயாராக இருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக திருச்சி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரரின் உருவப்படத்துக்கு மரியாதை செய்தார். திருச்சியை சேர்ந்த ராணுவ மேஜர் சரவணன் கார்கில் போரின்போது வீரமரணம் அடைந்த நிலையில், அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.