கோவையில் ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘தி பிங்க் பாதை’ மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு தொடங்கப்பட்டது

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் ‘தி பிங்க் பாதை’ என்ற விழிப்புணர்வு நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு செயலியை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் SNR Sons அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் குகன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் முழுவதும் பெண்களுக்கு இலவச மெமோகிராம் பரிசோதனை வழங்கப்பட உள்ளது. இதற்காக 0422-4500000, 0422-4389797 ஆகிய எண்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் டாக்டர் குகன் பேசுகையில், மார்பகத்தில் கட்டி ஏற்படும் வரை காத்திருக்காமல் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றார். இந்தியாவில் இளம் பெண்களிடையே மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், நகர்ப்புற பெண்களிடையே இதன் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். 20 வயது முதல் பெண்கள் மார்பக சுய பரிசோதனை மேற்கொள்ளவும், 30 வயதிற்கு மேல் மருத்துவ ஆலோசனை பெறவும், 40 வயதிற்கு மேல் மெமோகிராம் பரிசோதனை மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.

நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா பேசுகையில், மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றார். விழிப்புணர்வு இல்லாமை, சிகிச்சைக்காக செலவிட தயங்குவது மற்றும் சமூகத்தில் இதுகுறித்து வெளிப்படையாக பேச தயங்குவது போன்ற காரணங்களால் பெண்கள் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார். மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.




