• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திமுகவில் இணைந்து சீட் வாங்கியவர் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார்

போடியில் திமுகவில் இணைந்து நகர்மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிய பின், மாவட்ட மகளிரணி நிர்வாகி மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் போடி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மகளிரணி மாவட்ட நிர்வாகியாகவும், போடி நகர இணை செயலராகவும் இருந்தவர் முனியம்மாள். இவர் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 24 ஆவது வார்டில் வெற்றிபெற்று கவுன்சிலராக பொறுப்பு வகித்தார்.

இந்த முறையும் போடி நகராட்சி 22 ஆவது வார்டில் போட்டியிட சீட் கேட்டு கிடைக்காததால் திடீரென வியாழன்கிழமை திமுகவில் இணைந்தார். அவருக்கு 22 ஆவது வார்டில் போட்டியிட திமுக சார்பில் சீட் வழங்கப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சனிக்கிழமை திமுகவின் அங்கீகார கடிதம் அவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் திமுக சார்பில் போட்டியிடுவது உறுதியானது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு போடிக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் முனியம்மாள் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு ஓ. பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
முனியம்மாள் மீண்டும் அதிமுகவில் இணைந்ததால் திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே போடி நகராட்சி 22 ஆவது வார்டில் தி.மு.க. சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கல்பனாவிற்கு திமுகவின் அங்கீகார கடிதம் வழங்கப்படும் என தெரிகிறது. முனியம்மாள் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது.